மதிப்பிற்குரிய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!
கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-03-03-third-prize-winner.html
என் விமர்சனம்:
மின்வெட்டு நேரத்தில் காலாற நடந்து, பேருந்தில் ஏறி, காற்று வாங்கப் பயணம் மேற்கொள்ளும் விதம் புதுமை! காற்று வாங்கப் போய் கனவில் மிதந்த கதை! மின்வெட்டு நேரத்தில் மின்சாரம் பாய்ச்சிய வெளிச்சப்பூவை விவரிக்கும் விதம் அருமை!
கதாநாயகனின் வயது எங்கும் குறிப்பிடப் படவில்லை. பில்டிங் கான்ட்ராக்ட் தொடர்பான பணி செய்பவர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. பேருந்தில் இளவயதுப் பெண்கள் பலர் ஏறியவுடன் இவரது கனவு ஆரம்பித்திருக்கிறது.
ஆழ்மனதில் காதல் ஏக்கம் குடிகொண்டிருந்ததின் வெளிப்பாடாய் அந்த கனவு அமைந்திருக்குமோ? கனவு ஏன் வந்தது? காதல் தான் வந்தது! அதன் கோல வடிவங்களில் கோடி நினைவுகள் தந்தது.
கதாநாயகியின் அறிமுகம் திரைப்படத்தில் காண்பது போலவே கனவிலும் அமைத்தவிதம் அருமை! கதாநாயகி மலையாளம் கலந்த தமிழில் பேசும் மிக அழகான பருவ வயது மங்கை! அவர் பாலக்காட்டைச் சேர்ந்த 19 வயது அமுதா என்பதும், வெல்டிங் சம்பந்தமாக பயிற்சி பெற வந்திருப்பதாகவும் அழைப்புக் கடிதத்தைப் பார்த்து அறிந்துகொள்வதாக அமைத்தது அருமை!
கதாநாயகியுடன் உரையாடி அவருக்கு உதவத் துடித்தது, பாதுகாப்பாக அவரைத் தங்க வைக்க நினைப்பது, அவருக்கு உதவி தேவைப் படும்போதெல்லாம் தன்னை தொடர்புகொள்ளலாம் எனக் கூறுவதாக அமைத்து இவரைப்பற்றிய விவரங்களை அவளுக்குத் தெரிவிப்பதாக அமைத்தது எல்லாம் அருமை! நவீனமயக் காதலில் செல்போன் இடம்பெறுகிறது. மறக்காமல் செல்போன் எண்ணையும் பதிவு செய்து கொள்வதாகக் காட்டிய விதம் அருமை!
பேருந்தைப் பற்றி விவரிக்கும் போதும், கதாநாயகிக்கு உதவுவதன் மூலம் அவர் உள்ளத்தில் இடம்பிடித்து, அவருடன் தன்னை வெல்டிங் (அ) வெட்டிங் செய்து முயற்சிப்பதாகக் கூறும் இடத்திலும், கனவு கலையும் போது கர்ண கடூரமாகக் கிழவியின் குரல் ஒன்று ஒலிப்பதாக முடிப்பதும், அக்குரல் மூலம் அவரின் அருகில் அமுதாவிற்கு பதில் ’ஆயா அமுதா’ அமர்ந்திருந்ததாக அமைத்ததும் ஆசிரியரின் நகைச்சுவை உணர்வை நன்கு வெளிக்காட்டுகிறது!
விடுமுறை நாளில் வீட்டில் மின்வெட்டு!
காற்று வாங்கக் காலையில் ஒரு பயணம்!
கண்ணிமைகள் மூடவைத்த காற்றின் வேகம்!
காற்றின் குளிர்விப்பில் கனவில் மிதந்த தேகம்!
இளமங்கை அருகிருக்க இவர் மனதில் மோகம்!
இளமனதில் இடம்பிடிக்க இவருக்கோர் தாகம்!
இதற்கான காட்சிகளில் பளிச்சிடும் விவேகம்!
கனவென்று அறிந்தவுடன் கவலைதரும் சோகம்!
கதையெங்கும் மிளிர்கிறதே நகைச்சுவையின் பாகம்!
--------------------------------------
வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
காரஞ்சன் (சேஷ்)