என்ன பார்வை உந்தன் பார்வை?
முதுமை உடல்முழுதும் முத்திரை பதித்தாலும்,
உழைக்கும் எண்ணமது உதிரத்தில் ஊறியதால்
நோக்கில் தெளிவோடு சாக்கில் கடைவிரித்தாய்!
தேவைக்குப் பொருளீட்டத் தெருவோரம் கடைபோட்டு
கொண்டுவந்த காய்கறியை கூறாக்கி வைத்துள்ளாய்!
ஆறு,குளம் வற்றிடலாம்! ஆழ்மனதில் ஈரமுண்டு!
ஏரெடுத்துப் பிழைப்பவரை ஏறெடுத்துப் பார்க்கும்நிலை
எப்போது வருமெனவே ஏங்கிடுதோ உன்பார்வை!
பார்க்கத் தெரிந்தால்தான் பாதை தெரியுமென
நோக்கின்றித் திரிவோர்க்கு நுவலாதோ உம்வாழ்வு?
-காரஞ்சன்(சேஷ்)