சனி, 8 பிப்ரவரி, 2014

சிறுகதை விமர்சனப்போட்டி! இரண்டாம் பரிசு!-காரஞ்சன்(சேஷ்)



வணக்கம் நண்பர்களே!

மரியாதைக்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் (VGK) அவர்கள் நடத்தி

 வரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் "சுடிதார் வாங்கப் போறேன் "


கதைக்கான   என் விமர்சனத்திற்கு இரண்டாம்  பரிசு கிடைத்துள்ளது என்பதை

மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறேன். திரு VGK அவர்களுக்கு என்

உளமார்ந்த நன்றி! தெரிவு செய்த நடுவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!





 
 
அவருடைய வலைப்பூவிலிருந்து தகவலை அப்படியே
 
 
பகிர்ந்துள்ளேன்! நன்றி!
 
 
 

                                                                  ======$$$$$=====


இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர் :







இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. E.S. சேஷத்ரி 


அவர்களின் விமர்சனம்:






சுடிதார் வாங்கப் போறேன்” மனதில் துளிர்க்கும் எண்ணமா? வெளியே செல்லும்போது வீட்டவர்க்கோ, வெளியில் கேட்பவர்க்கோ சொல்லுகின்ற சேதியா? ஜவுளிக்கடைக்குள் நுழைந்தவுடன் கடைக்காரர் என்ன வேண்டும் என்று கேட்பதற்குச் சொல்லும் பதிலா? இப்படி தலைப்பே பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது.
 
தான் வாங்கி வருகின்ற சேலை குறித்து தன் மனையாள் எதுவும் கருத்துரைப்பதில்லை என்றும் மகிழ்வை வெளிப்படுத்துவதில்லை என்றும் தான் தெரிந்தெடுத்த நேர்த்தியைப் பாராட்டவில்லையென்றும் அதை மகிழ்வொடு பெற்று அணிந்துகொள்வதில்லையென்றும் மனவாட்டம் பெறுகின்ற அந்த மணாளர் அவளின் காபி டீயையாவது, சிற்றுண்டியையாவது, உடையையாவது, அணிகளையாவது என்றேனும் பாராட்டியது உண்டா? பாராட்டுபவராக இருந்திருந்தால் இந்த எதிர்பார்ப்பு ஏற்புடையது.
 
எந்த மகளிரும் மாதராரும் துணிக்கடையில் விளம்பரப் பதுமைக்கு கட்டியுள்ள உடுப்புகளைப் பெரிதும் விரும்புவார்கள். மற்றவர்கள் உடுத்தி அல்லது பூண்டு வருவதை ஏற்றமுடையதாகக் கருதுவார்கள். அவர்களிடம் இருப்பதை விட தன்னிடம் இருப்பது நேர்த்தியுடையது, அழகுடையது அலங்காரமானது, விலைமதிப்புடையது என்றாலும் மற்றவர்களின் மேனியில் திகழ்வதையே பெரிதும் அவாவுவார்கள். அவர்களே போய் எடுத்தால் இதைவிட தரக்குறைவாகவே, சிக்கனமாகவே எடுப்பார்கள். இன்னும் சிலர் மற்றவர்களிடம் இருப்பதைவிட தனக்கு வருவது மிக விலையுடையதாக மிக்க தரமுடையதாக அமையவேண்டும் என்று அவாவுவார்கள். எப்போதும் மற்றவர்கள் பார்த்து ,போற்றிப் பாராட்டினால், நயங்களை விவரித்துச் சொன்னால் அப்போதுதான் தன்னவர் வாங்கிவந்தது தனக்கு உகந்ததாக ஏற்றுக்கொள்வார்கள்.
 
உள்ளுரிலுள்ள சமவயதுள்ள தன் மூத்த சம்பந்தி அம்மாள் நன்றாயிருப்பதாகப் பரிந்துரை செய்யும் புடவைகளை மட்டும் இவரின் மனைவி அணிந்துகொள்ளும் வழக்கம் கொண்டிருந்ததும், அந்த சம்பந்தியம்மாளும் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரும் பாராட்டும் வகையில் இவர் ஒரு புடவையை சமீபத்தில் வாங்கி வந்ததும் உடைகளைத் தெரிவு செய்து வாங்குவதில் அவர் தனித்திறமை வாய்ந்தவர் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
மகன் வெளியூரில் இருப்பதாலும், மனைவி எப்போதுமே துணிக்கடைக்கு வருவதில் நாட்டமில்லாதவர் என்பதாலும் தன் வருங்கால மருமகளுக்கு, பிறந்தநாள் பரிசாக சுடிதார் ஒன்றை வாங்கித்தர அவர் மட்டுமே சென்றது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் அமைகிறது. கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளவயதுப் பெண் என்பதால் சுடிதார் வாங்கிக் கொடுக்க நினைப்பது ஒரு சரியான முடிவு. அதன் மூலம் காலமாற்றத்திற்கேற்ப புதுமையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தவர் என்பது புலப்படுகிறது.
 
 
 
பலமுறை புடவைகள் வாங்கிய அனுபவம் இருந்தாலும், முதன்முதலாக ஒரு சுடிதார் வாங்கச் சென்ற அனுபவத்தை மிக மிக நகைச்சுவையாகவும், யதார்த்தமாகவும் விளக்கியவிதம் பாராட்டுக்குரியது. சுடிதார் வாங்கச் செல்லுமுன் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை விற்பனைப் பிரதிநிதியின் உரையாடல் மூலம் விளங்கவைத்தது அருமை!  “ஆள்பாதி ஆடைபாதி “ என்பார்கள். முதன்முதலாக பிறந்தநாள் பரிசாக ஒரு நல்ல உடையை, வரப்போகும் மருமகளுக்குப் பரிசாக அளிப்பதன் மூலம்  தன்னைப் பற்றி  ஒரு நல்லுணர்வு ஏற்படும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது!
 
ஒரு சுடிதாரைத் தெரிவு செய்ய பல பிரிவுகளுக்கும் சென்று விலை ஒரு பொருட்டல்ல தரமும் நேர்த்தியும் மிக முக்கியம் என்பதில் கவனம் செலுத்தி  தெரிவு செய்ததில் இருந்தே அவரின் ரசனை தனித்தன்மை வாய்ந்தது என்பது புலனாகிறது. சுடிதார்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த விதத்தை “ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன. இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன” என்று விவரிப்பதன் மூலம் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.
 
வாங்கித்தந்ததைப் பெற்றுக்கொண்டாலும் உடுத்திக்கொள்வதற்கு முன்பாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளருக்கு அதை டிஜிடல் கேமரா மூலம் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அனுப்பி அவரது பாராட்டைப் பெற்ற பிறகே அதனை உடுத்திவந்து தன் பிறந்த நாளுக்கான ஆசீர்வாதத்தை தனக்கு ஏற்படவுள்ள புக்ககத்து மாமன் மாமியிடம் பெற்றது மாமனாரைவிட மருமகள் சமயோசிதமான ஆற்றலுடையவள் என்பதை மெய்ப்பிக்கின்றது.
 
வாங்கிய சுடிதார் இன்றைய நவ நாகரீகப் பெண்கள்  உபயோகிக்கக் கூடிய ஃபேஷன் தானா, என்ற சஞ்சலமும், சந்தேகமும் மனதினில் இருக்க அதை நிவர்த்தி செய்து கொள்ள ஒருமணிநேரம் செலவு செய்து வழியில் கண்ட இளம்பெண்களைப் பார்த்து சுடிதார் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியதும், அதன் பாதிப்பால் வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியை சுடிதாரில் பார்க்க ஆசைப்பட்டு அது ஈடேறாமல் போனதும் நல்ல நகைச்சுவை.
 
தன்னுடைய தேர்வுக்குக்கூட ஒரு அங்கீகாரம் இருக்கிறதே என்ற பூரிப்பு மனைவி இடத்தைவிட வரப்போகின்ற மருமகளிடம் கிடைத்தது கதையில் களிகூறத்தக்கது! இந்த நிகழ்வுக்குப்பின் தன் மணாளருடைய தெரிவு செய்யும் திறனை மனைவியும் தக்கதாக ஏற்றிருப்பாள் எனக் கருத இடமுள்ளது. குடும்பத்தில் ஒற்றுமையும் சுமூகமும் நிலவ ஒரு திருமகள் வருகிறாள் என்பது இந்தக்கதையில் உணரப்படுகின்ற சேதியாக இருக்கின்றது. குடும்பத்தின் குதூகலத்திற்கு வித்திடுகின்ற கதை இது. இத்தகைய விருட்சங்கள் உலகமெலாம் மிகுந்து சாந்தமும் சமாதானமும் நிலவுமாக!
 
-காரஞ்சன்(சேஷ்)
     

சனி, 1 பிப்ரவரி, 2014

"தை வெள்ளிக்கிழமை!" சிறுகதை விமர்சனப் போட்டி முடிவு!



வணக்கம் நண்பர்களே!

மரியாதைக்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் (VGK) அவர்கள் நடத்தி

 வரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் "தை வெள்ளிக்கிழமை" கதைக்கான

என் விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன்

தெரிவித்துக் கொள்கிறேன். திரு VGK அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

தெரிவு செய்த நடுவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

 


 


 

 
 
 
அவருடைய வலைப்பூவிலிருந்து தகவலை அப்படியே
 
 
பகிர்ந்துள்ளேன்! நன்றி!
 
 
 
                                                                  ======$$$$$=====


மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் :




 

 

 

 திரு. E.S. சேஷாத்ரி 


 






அவர்கள்











மூன்றாம் பரிசினை வென்றுள்ள 


திரு. சேஷாத்ரி அவர்களின் விமர்சனம்:



REFERENCE NUMBER:  VGK 02

"தை வெள்ளிக்கிழமை" சிறுகதை விமர்சனம்,

இரண்டாம் தைவெள்ளியன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கதை “தை வெள்ளிக்கிழமை”. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வெள்ளி என்றால் மங்கலம் என்று சொல்வார்கள். இந்த மங்க நிகழ்வும் புதியதோர் வழி பிறக்கின்ற செயலும் இந்தக் கதையில் இணைந்து பரிணமிப்பது உவகையளிக்கின்றது. 

வேண்டாம் என்று ஒதுக்கப்படுகின்ற கல்லே கருவறையின் கடவுள் சிலையாக ஆவதுபோல, கருவைக் கலைக்க நினைத்த உள்ளம், பிறந்த பெண்குழந்தையை, தங்க விக்ரஹம், கெஞ்சினாலும் கிடைக்காது 5ஆம் பெண், தை வெள்ளியில் தோன்றிய மஹாலக்ஷ்மி, இவள் எங்களுக்கு வேண்டும்- எங்களுக்கே வேண்டும் என்ற மனமாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம்.

பிரசவமா? ஐந்தாவதா? பெண்ணா? என்று எண்ணும் சமுதாயத்தில் தைவெள்ளி- தங்க விக்ரஹம் கிடைக்காத ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனம் வேறு எதையும் விரும்பாதது மகிழ்வளித்தது.  அந்தக் குழந்தைக்கு ஈடாக எவ்வளவு தொகை கிடைத்தாலும் அல்லது வசதிகள் ஏற்பட்டாலும் இந்தக் குழந்தையை யாருக்கும் தரமாட்டோம் என்ற மன உறுதி தெய்வம் தந்த வரம் தான்.

அத்தகு பெற்றோர் அவனியில் பெருகுக என்று மனம் எக்களிக்கும் விதத்தில் படைத்துள்ள பாங்கு எண்ணி மகிழ்வது மட்டுமல்லாது அந்தப் பெற்றோரை பெரிதும் போற்றுவதுடன் மனிதாபிமானத்துடன் தாயின் ஆரோக்யத்தையும் குழந்தையின் நலத்தையும் பெற்றோர்களுடைய வளத்தையும் குழந்தையில்லா தம்பதியினருடைய வாட்டத்தையும் பல கோணங்களிலும் நன்கு சிந்தித்து தன்னுடைய மருத்துவத் தொண்டை பயனுள்ள சமுதாயத் தொண்டாக ஏற்று அனைத்துத் தரப்பினருக்கும் மிகுந்த மனநிறைவை கூட்டுகின்ற அந்த மருத்துவரை மருத்துவச் சமுதாயம் முன்மாதிரியாக ஏற்று அவரின் அடிச்சுவட்டில் தாமும் சேவை உணர்வோடு தொண்டாற்ற நல்லதோர் பக்குவத்தை பெற்றார்களானால் இந்தப் படைப்பினை ஆக்கியவர்களுக்கு ஒரு மனநிறைவு நிச்சயம் ஏற்படும் என்பதை அவர்களுடைய (வை.கோபாலகிருஷ்ணன்) நெஞ்சம் சொல்லாமல் சொல்லுகிறது.
 
சமயோசிதமான முடிவுகளையும், திருப்பங்களையும், வாக்குறுதிகளையும் செயல்படுத்த முடியாதபோது யாருக்கும் மனவருத்தம் ஏற்படாதபடி வெளிப்படுத்துகின்ற சாதுர்யமும் அந்த மருத்துவருடைய பெரும் பலமாக அமைந்திருக்கிறது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்றாலும் கிடைக்குமென்று நம்பியது வந்து சேரவில்லையென்றாலும் அதிலும் விட்டுக் கொடுக்கின்ற பரந்த உள்ளம் குழந்தையில்லா தம்பதியினரின் நீக்குபோக்குக்கு ஏற்ப மனதை சமநிலைப் படுத்திக்கொள்ளுகின்ற ஆற்றல் உண்மையிலேயே அரிதானது! அருமையானது! அபூர்வமானது!

மொத்தத்தில் கதைமாந்தர்கள் கால வெள்ளத்திற்கேற்ப மனப்பக்குவத்தை அமைத்துக் கொண்டிருப்பது கதாசிரியருடைய பரந்த மனப்பான்மையை அவர் எதிர்பார்க்கின்ற சமுதாயச் சூழலை, நெஞ்சத்திரையிலே ஓடவிட்டு சமுதாயத்தில் இடம் பொருள் காலம் இவற்றிற்கேற்ப தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்கின்ற பாங்கினை உணர்த்துகின்றது. இது ஒரு வாழ்க்கை நெறிமுறை விளக்கமாக அமைந்துள்ளது.

இந்தப் படைப்பு தாய்சேய் மருத்துவமனைகள் அனைத்திலும் கருத்து விளக்கமாக தக்க படங்களுடன் அமையுமானால் பேறுகாலப் பெண்டிரும் அவர்தம் கணவரும் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மனசாட்சியோடு செயலாற்ற மனமகிழ்வோடு மனையறம் நடத்த ஒரு விளக்கமாக அமையும் என்று கருதுகிறேன்.

 
இந்த ஏற்றமான மாற்றம்தான் மகிழ்வூட்டும் வெற்றியாகும். மனநிறைவுதரும். இத்தகு உள்ளங்கள் மேலும் பெருகும். எதிர்பார்ப்போம். இத்தகு சிந்தனைகள் எல்லோரிடத்தும் முகிழ்க்குமானால் எங்கும் மகிழ்வு! என்றும் மகிழ்வு! யாவர்க்கும் மகிழ்வே!

உங்கள் எழுதுகோலுக்கு என் வணக்கம்! உங்கள் மன உணர்வுகளுக்கு எனது பாராட்டுக்கள்!
 
காரஞ்சன்(சேஷ்)
 
===$$$$$$$$$$$===========