இசையெனும் அமுதினில் இவரொரு பாகம்!
எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்?
குப்தர்கள்
காலம் பொற்காலம்
இந்திய வரலாற்றில் !
உந்தன்
காலம் பொற்காலம்
இசையுலக வரலாற்றில் !
எங்கிருந்தோ வந்தாய்!
இசைக்கலைஞன் நான் என்றாய்!
இங்குனையே நாம்பெறவே
என்னதவம் செய்தோமோ!
செந்தமிழ் வரிகளுக்கு
செவிகுளிரும் இசைசேர்த்துத்
தெவிட்டாத தெள்ளமுதைத்
தேன்மழையாய்த் தவழவிட்டாய்!
இன்றைய தொழில்நுட்பம்
இல்லாத காலத்தே
நுட்பங்கள் பற்பலவும்
நும் இசையில் நுழைத்தவரே!
வளர்ந்த நிலையில்- நீர்
வடிவமைத்த பாடல்கள்
வளரும் பருவத்தே- நாங்கள்
வாயாரப் பாடியவை!
எதார்த்த வாழ்வியலை
எடுத்துரைத்த காலத்தில்
இசைக்குத் தளமிருந்தது!
கவிஞர்க்குக் களமிருந்தது!
மெல்லிசையின் வருடலிலே
சொல்லாட்சிக் கவிஞர்கள்
சொக்கிநின்ற தாக்கத்தில்
ஆக்கினரே அரும்பாடல்!
காதலோ, ஊடலோ, சாடலோ
மோதலோ, தேடலோ,ஆடலோ
ஏற்ற பலபாடல்கள்
சாற்றின உம் திறத்தை!
உந்திய சிந்தனையால்
உருவான பாடலுக்கும்
சந்தம் பலதந்து
விந்தை புரிந்தவர் நீர்!
இறவாப் பாடல்கள்
இரட்டையரின் கைவண்ணம்!
தனித்து நின்றும் -நீர்
தணியாத இசைவெள்ளம்!
மயக்கமா!கலக்கமா! பாடல்
மற்றொரு கவிஞனை
பெற்றெடுத்துத் தந்தது!
பேரெடுக்க வைத்தது!
பாடிய குயில்களுக்கு
பண்ணமைத்துத் தந்தவர் நீர்!
எண்ணங்களுக்கெல்லாம்
இசைவடிவம் தந்தவர் நீர்!
நினைத்தாலே இனிக்கும்!
நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்!
இசைவானில் உன்பாடல்
திசையெங்கும் ஒலித்திருக்கும்!
தமிழ்த்தாய் வாழ்த்து
தரணியிலே ஒலிக்கும்வரை
உந்தன் புகழும்
உலகெங்கும் நிலைத்திருக்கும்!
என்னுளம் கவர்ந்த
மென்னுளம் கொண்டவனின்
ஆன்மா அமைதிபெற
அருளாயோ இறைவா நீ!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!