செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! - காரஞ்சன்(சேஷ்)

 
 

ஈற்றினிலே          ஈரேழை                      ஏந்திவரும்           புத்தாண்டில்
கற்கண்டாம்         நல்வாழ்த்தைக்      களிப்புடனே         நவில்கின்றேன்!

எல்லாத்                துறைகளிலும்           எம்நாடு                 சிறந்ததென்று
சொல்லும்           நிலையடைந்து         சோதனைகள்     விலகட்டும்!

இன்னலின்றி      மக்களெங்கும்           இன்புற்று              வாழ்ந்திடவே
இயற்கைச்           சீற்றங்கள்                   இல்லாமல்           விலகட்டும்!

பொல்லாத          நோய்களெலாம்       போக்கிடமின்றி    இனி
இல்லாமற்          போனதென                 எல்லோரும்          மகிழட்டும்!
 
கல்லாதோர்         இல்லையென          களிக்கின்ற           நிலையடைய
எல்லா                    முயற்சிகளும்          எம்நாட்டில்           பெருகட்டும்!
 
அன்புளம்             பெருகிவிட்டால்        அனாதை               யாருமில்லை!
வன்முறை          நீங்கிவிட்டால்            எங்கெங்கும்           இன்பநிலை!
 
இல்லத்தில்          துவங்கிடுதே              இதற்கான            முதல்நிலையும்!
வெள்ளை              உள்ளத்தில்                 விதைக்கும்         நற்சிந்தனைகள்
எல்லையிலாப்     பயனளிக்கும்!         என்றென்றும்       உயர்வளிக்கும்!
 
புத்தாண்டு           வாழ்த்துகளைப்          புகன்றிடும்          இந்நாளில்
நல்விதைகள்     ஊன்றிடுவோம்           நம்நாடு                 தழைத்தோங்க!
 
 
 
 
அனைவருக்கும்  என்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

                                                                                       -காரஞ்சன்(சேஷ்)

புதன், 25 டிசம்பர், 2013

விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)








விரிந்த மைதானம்!
வலைகட்டி விளையாடும்
விளையாட்டில் விதியுண்டு!

மாடப் புறாக்கள்
மைதானம் வந்தது
விதிப்படி விளையாட்டா?
விதியின் விளையாட்டா?

                                     -காரஞ்சன்(சேஷ்)

சனி, 21 டிசம்பர், 2013

ஓவியக்கவிதை- காரஞ்சன்(சேஷ்)





நண்பர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று அவர் தம் வலைப்பூவில் பகிர்ந்த ஓவியத்திற்கான என்னுடைய கவிதை இது!. என் கவிதையை ஏற்று தன் வலைப்பக்கத்தில் கவிதை தொடர்பாக என்னைப்பற்றித் தந்த அறிமுகம்!


காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு சேஷாத்ரி புதுவையில் வசிப்பவர்.  இந்த கவிதை அழைப்பில் முதல் கவிதையை எழுதிய திரு இ.சே. இராமன் அவர்களின் உறவினர். இதுவரை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் சில சமயங்களில் அலைபேசி மூலம் பேசியது உண்டு. சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான கவிதைகளை அவ்வப்போது தனது பக்கத்தில் வெளியிடுவார். அத்தனையும் சிறப்பான பகிர்வுகள். 

அறிமுகத்தோடு பகிர்ந்த அவருக்கு எனது உளமார்ந்த நன்றி!

கவிதையைப் படியுங்கள்! கருத்தினைப் பதியுங்கள்!

கவிதை இதோ!

பொங்கிவரும் அன்புடனே
நங்கையவள் கூந்தலிலே
நறுமண மலர்ச்சரத்தை
நாயகன்தான் சூட்டிவிட 

எங்கிருந்து வந்தனவோ,
இத்தனை வண்டினங்கள்?
பூவிதழில் தேனருந்த
போட்டியாய் வந்தனவோ!

வலிமைமிகு கரத்தாலே
வண்டினத்தை அவன் விரட்ட,
நாணித் தலைசாய்க்கும்,
நங்கையவள் கண்ணிரண்டும்,
வண்டுகளாய் மாறி,
வாலிபனை மொய்ப்பதென்ன?

                          -காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 12 டிசம்பர், 2013

மழைக்காலப் பார்வை...காரஞ்சன்(சேஷ்)



கொட்டும் மழையிலும்......

முட்டையுள்ள  கூட்டை
விட்டுப் பிரியாமல்
நனைந்தபடி
மரத்தின்மேல்
அமர்ந்திருககும்
ஒரு காகம்!

கட்டப்படும்
அடுக்குமாடிக் கட்டிடத்துள்
கயிற்றிலாடும் சில காகங்கள்!

மழையுடன்
இவற்றை
இரசித்தபடி
வாடகை வீட்டின்
பால்கனியில் நான்!

                                       -காரஞ்சன்(சேஷ்)

 

திங்கள், 9 டிசம்பர், 2013

புகைப்படங்கள்!- காரஞ்சன்(சேஷ்)




கடந்த காலத்தை
கண்முன் நிறுத்தி
சிந்தையைத் தூண்டும்
சின்னங்களாய்
கருப்பு வெள்ளை
புகைப்படங்கள்!

இறந்த காலத்தை
எதிர்காலம் அறிந்திட
இறந்த காலத்தின்
நிகழ்காலப் பதிவுகளாய்
நிழற்படங்கள்!

முன்னோர் பலரின்
முகமறிய வழிவகுக்கும்!
அந்நாளின் தோற்றத்தை
எந்நாளும் பிரதிபலிக்கும்!

கடந்தகால நினைவுகளில்
கரைந்து போக வழிவகுக்கும்!
அரிய புகைப்படங்கள்
அனைத்தையும் காத்திடுவோம்!

கணினி யுகத்தினில்
காத்திட வழிஉண்டு!
ஏற்றிடுவோம் கணினியிலே
எதிர்காலம் அறிந்திடவே!

-காரஞ்சன் (சேஷ்)


பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 2 டிசம்பர், 2013

பார்த்ததில் இரசித்தது!- நகைச்சுவை பகிர்வு- காரஞ்சன்(சேஷ்)



இந்த வாரம் நான் இரசித்த காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளேன்!
பார்த்து இரசிக்க வேண்டுகிறேன்!

நன்றி!

காரஞ்சன்(சேஷ்)

காணொளியைப் பகிர்ந்த என் தம்பிக்கு நன்றி!

ஞாயிறு, 17 நவம்பர், 2013

தீபத்திருநாள் வாழ்த்து! -காரஞ்சன் (சேஷ்)




ஆகினாய் ஒளிவடிவாய்!
ஏகிஎன்  மனத்துள்ளே
என்னாளும் உறைபவனே!
அகலாத நினைவுடனே
அகல் விளக்கேற்றி வைத்தோம்!
அகல் விளக்கின் ஆவளியில்
அகலட்டும் இருளனைத்தும்!
புகலிடம் நின் பொற்பாதம்!
புகல்நாவே அவன்நாமம்!
இகல் வெல்லும்! இடரகற்றும்!
பாபங்கள் அகலட்டும்                                              
தீபஒளி தரிசனத்தில்!
                                                           -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 12 நவம்பர், 2013

நீங்காத எண்ணம் ஒன்று.... -காரஞ்சன்(சேஷ்)





நீங்காத எண்ணம் ஒன்று......

பிறந்த இடமும்
வளர்ந்த வீடும்
நீங்கா நினைவுகளில்
நிச்சயம் இடம்பிடிக்கும்!

சுட்ட கல்லொடு
சுண்ணாம்பு மட்டுமின்றி
நினைவில் வாழ்வோரின்
எண்ணக் கலவைகளை
தன்னுள் கொ(க)ண்ட வீடு!

பணியின் பொருட்டு
பல இடங்கள் சென்றாலும்
நிலையாய் என்னுள்
நிறைந்திருக்கும் வீடு இது!

வளர்ந்த வீட்டின்
வாசலில் நுழைகையில்
இனம்புரியா மகிழ்வு
என்றென்றும் என்னுள்!

நிழற் கடிகாரமாய்
நின்றிருந்த தூண்கள்!
துள்ளி விளையாடிய
தோட்டத்தின் பாதைகள்!
சிட்டுக் குருவியென
சிறகடிக்கும் எந்தன்மனம்!

எண்ணத்தைக் கவரும்
வண்ண மலரனைத்தும்

எங்கள் சொந்தமென
எப்போதும் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சிகள்!

நாங்கள் மட்டுமல்ல!
தோட்டத்துப் பயிர்களும்
ஊட்டமாய் வளர
ஊற்றுநீரை உவந்தளித்த
தோட்டத்துக் கிணறு!

பெருமழைக்காலத்தில்
வறுத்த பயறு வகை
வாய் நிறைத்திருக்க
துப்பறியும் நாவல்களில்
தொலைந்து போன தருணங்கள்!

உறைவிடம் இன்னும்
மறைந்தவரின் பெருமைகளை
உரைக்கும் இடமாகவே
உணரச் செய்கிறது!
கடந்தகால நினைவுகளில்
கரைந்து போகச்செய்கிற்து!

எண்ணத்தில் நிறைந்து
எப்போதும் என்னை
புதுப்பித்துக் கொள்ளும்
புகலிடமாய்த் திகழ்கிறது!

-காரஞ்சன் (சேஷ்)

படங்கள்: காரஞ்சன்(சேஷ்)
எங்கள் வீட்டுத் தோட்ட மலர்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- காரஞ்சன்(சேஷ்)








வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும்

எங்களது உளங்கனிந்த

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!








-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளிச் சிந்தனைகள்! -காரஞ்சன்(சேஷ்)



சிறுவயதில்..

அடைகாத்த ஆசைகளுக்கு
விடைகிடைக்கும் நாளாய்
அடைமழை ஐப்பசியில்
அமைந்திடும் தீபாவளி!

புத்தாடை  உடுத்தி
மத்தாப்பு கொளுத்தி
இருப்பதைப் பகிர்ந்து
இனிப்பொடு காரம்
இணைந்துண்ட மகிழ்வுக்கு
ஈடில்லை உலகினிலே!

இருண்ட வானம்
இடையிடையே வெளிவாங்கி
வறுமை நிலையல்ல
வளம்பெறுவீர்! என்றுணர்த்தும்!

தூறலில்லா வேளைகளில்
ஈரம் உலர்த்திட
இருக்கும் பட்டாசை
விரிந்தகன்ற தாம்பாளம்
முற்றத்தின் மூலைதனில்
கூடல் வாய் பகுதியிலே
குச்சிமேல் சுமந்திருக்கும்!

காலை விடிவதற்குள்
கலசமும் மத்தாப்பும்!
சரமாய் வெடித்தால்
சட்டென முடியுமென்று
சரங்களைப் பிரித்து
சரிசமமாய்ப் பகிர்ந்திடுவோம்!

எட்டுப் பிள்ளைகளும்
விட்டு விட்டு வெடிப்பதனால்
இடைவேளையின்றி
வெடிச்சத்தம் கேட்டிருக்கும்!

அந்நாளில்
தீபாவளி இரவில்
இறுதியாய் ஒலிக்கும்
பட்டாசின் வெடிச்சத்தம்
இவ்வளவு விரைவாக
இந்நாள் முடிந்ததே
எனும் தாக்கத்தை
என்னுள் விதைத்தது!

இப்போதெல்லாம்..

இறுதியாய் ஒலிக்கும்
ஒற்றை வெடிச்சத்தம்
பட்டாசுத் தொழிற்சாலையில்
திரியாய்க் கருகிய
உயிர்களின் சோகத்தை
உணர்த்துவதாய்த் தோன்றுகிறது!

வெடிக்கும்போது
வெளிப்படும் புகையோ
காற்றில் நஞ்சை
ஏற்றிச் செல்கிறது!
மாசுபடும் காற்றாலே
மனிதர்க்குப் பலநோய்கள்!

தீபஒளித் திருநாளில்
ஒளியேற்றி
வெடி தவிர்ப்போம்!
இணைந்து கொண்டாடி
இன்புற்று வாழ்ந்திடுவோம்!

                                                                -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 29 அக்டோபர், 2013

காலம்! உறவுப்பாலம்!



நாட்கணக்கில் காத்திருந்து
கடிதம் கண்டவுடன்
கவலை மறந்தது
ஒரு காலம்!

அவசரத்திற்கு மட்டுமின்றி
அனைத்திற்கும் தந்தி என
அடுத்தொரு காலம்!
 
வரிவடிவம் மட்டுமின்றி
குரல்கேட்டு குதூகலிக்க
தரைவழித் தொலைபேசி
தடம்பதித்த தொருகாலம்! 

படமெடுக்கும்! பாட்டிசைக்கும்!
பண்பலைகள் பலஒலிக்கும்!
செல்லுமிடமெங்கும்
செய்திகளைச் சேர்க்கும்!

செல்வந்தர் கைகளிலே
“செல்”லிருந்த நிலைமாறி
எல்லோர்க்கும் பொதுவாகி
செல்லுமிடமெங்கும்
செல்லுடனே செல்லும்
செல்வாக்கு பெற்றது- இக்காலம்!

 உலகைச் சுருக்கி ஊராக்கி
ஆசைமுகம்பார்த்து
அளவளாவும் வசதிகளை
இணையம் அளிப்பதுவும்- இக்காலம்!

 காலமாற்றத்தில்
பாலமாய்ப் பலவடிவில்
பயனளிக்கும் தொழில்நுட்பம்
வாழிய வாழியவே!
                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அழகோ அழகு! -காரஞ்சன்(சேஷ்)


 
 
 அழகு!
 
 
 
 
 
 
 

அமைதி தவழும் அதிகாலைப் பொழுதழகு!

அலர்ந்த பூக்களில் அமர்கின்ற வண்டழகு!

அத்தனை புற்களிலும் முத்தான பனிஅழகு!

மாலைப் பொழுதின் மங்கிய ஒளி அழகு!
 

நீலவானத்தில் நீந்தும் முகில் அழகு!
 
பிறைநுதலில் விண்மீனாய் பிரியாத பொட்டழகு!

ஓடும் நதி அழகு! ஊர்க்குளத்தில் மீனழகு!

தளிர்கள் உரைத்திடும் தாய்மொழி தனியழகு!
 

வான்மீது விழுகின்ற வளைவான வில்லழகு!

கருத்த மேகத்தை  கடக்கின்ற கொக்கழகு!

சக்கரத்தின் சுழற்சியிலே மட்பாண்ட பிறப்பழகு!

முழுநிலவை மூடி முத்தமிடும் முகிலழகு!

 
விடிகின்ற வேளைதனில் விரைகின்ற புள்ளழகு!

வெள்ளம் வடிந்தபின்னே வெண்மணல் ஆறழகு!

வெண்மணலில் தடம்பதித்து விரைவதும் ஓரழகு!

கால்களை வருடும் கடலலையும் ஓரழகு!

 
தென்றல் சுமந்துவரும் தெம்மாங்குப் பாட்டழகு!

பள்ளமில்லாச் சாலையிலே பயணிப்பதோர் அழகு!

இருபுறமும் மரமிருக்கும் தார்ச்சாலை தனிஅழகு!

மழையில் குளித்தபின்னர் மரங்களெல்லாம் அழகு!

 
வான்மழையில் நனைந்த வாடிய பயிரழகு!

காற்றின் திசையினிலே நாற்றசைவும் நல்லழகு!

நற்றமிழின் சொற்களினால் நவில்கின்ற கவிஅழகு!

இயற்கையை இரசிப்பவர்க்கு எந்நாளும் உலகழகு!

                                                                                                -காரஞ்சன்(சேஷ்)

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 24 அக்டோபர், 2013

இனியொரு விதி செய்வோம்! -காரஞ்சன்(சேஷ்)



வெண்முத்து வெண்டைகளை
நீதி கேட்டு வீதியில் இறைத்தனரோ?

விளைவித்தது குற்றமா?
விளைந்தது குற்றமா?

விழலுக்கா நீரிறைத்தோம்?
விளைவதற்கே உழைத்தோம்!
விலைபோகவில்லையெனில்
வீதியில் இறைத்தல் நன்றோ?

பாலின்றிப் பலகுழந்தை
பாரினில் பரிதவிக்க
பாலின் விலையுயர்த்த
சாலையில் சாய்க்கின்றார்!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு
அளித்திடலாம் இலவசமாய்!
உண்பொருள் ஈந்ததினால்
உவகை பிறக்காதோ?

பசியாறிய உள்ளங்கள்
பரிமாறும் வாழ்த்திற்கு
பாரினில் விலையேது?

விலைபோக வில்லையென
விளைந்த பொருட்களை
வீணாக்கல் தடுத்திடவே
இனியொரு விதிசெய்வோம்!
எந்நாளும் அதைக்காப்போம்!

  -காரஞ்சன்(சேஷ்)

செய்தி: நன்றி தினமலர்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!- காரஞ்சன்(சேஷ்)

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!


 
திருவுடையோர் நாளாக திருநாள்கள் இல்லாமல்
வறுமைநிலை அகன்று வளம்பெறும்நாள் திருநாள்!

கற்றறிந்தோர் ஒளியேற்ற கல்லாமை இருளெங்கும்
இல்லாமற் போனதென இனிக்கும் நாள் திருநாள்!

விண்முட்டும் விலைவாசி! விளைநிலமும் மனையாச்சு!
நிலத்தடி  நீருமிங்கே   நீளாழம் போயாச்சு!

போராடி விளைத்தபொருள்   போறாத விலைபோச்சு!
மண்ணை நம்பிவாழ்வோர்   மனமுடையும் நாளாச்சு!

வான்மழையின் கருணையினால்  வளமான பயிர்விளைய
உழவன் மகிழும்நாள் உலகிற்கே திருநாள்!

பெண்ணினத்திற் கெதிரான வன்முறைகள் ஒழிந்திங்கு
அண்ணல் விழைவுதனை அடையும்நாள் திருநாள் !

அண்டை நாடுகளின் சண்டை நிலையகன்று
இன்னலின்றி மக்களெங்கும் இன்புறும்நாள் திருநாள்!

வேற்றுமையால் விளைந்திடும் வீணான கலவரங்கள்
ஒற்றுமையால் ஒழிந்ததென உவக்கும்நாள் திருநாள்!

மொழியாலும் மதத்தாலும் பழித்திடும் நிலைமாற
எழுச்சியுடன் நாம்முயலும் எந்நாளும் திருநாள்!

ஊழல் ஒழித்திடவும்   உழைத்தே உயர்ந்திடவும்
அழையாமல் முன்வந்தால் அந்நாளே திருநாள்!

தந்திரத்தை நம்பாமல் தம்திறத்தை நம்பி
விந்தைகள் விளைவிக்க விழையும் நாள் திருநாள்!

நன்மைகள் பெருகி நாடு வளம்பெற்றதென்று
சிந்தை குளிர்ந்து “நாம் சிரிக்கும்நாளே திருநாள்!”

                               -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!


திரு ரூபன் அவர்களின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை!

வெள்ளி, 18 அக்டோபர், 2013

களை- காரஞ்சன்(சேஷ்)





களை!

கரிபடிந்த 
அடுக்களைச்சுவர்
கணக்குப்போட  
கரும்பலகையாய்!

வெள்ளையடித்த 
உட்சுவர்
கிறுக்கி விளையாடும்
குழந்தைகட்கு
வெள்ளைக் காகிதமாய்...

வண்ணக் கிறுக்கல்கள்
வாசல் சுவரெங்கும்!
வாத்தியாரான
வாண்டுகளின்
விளையாட்டால்!

உயரத்தை ஒப்பிட
அப்பா அம்மாவுடன்
ஒட்டி நின்று
வரைந்த கோடுகள்!

இவையாவும்
உயிரோவியங்களாய்
ஓட்டு வீட்டுச் சுவர்களில்!

வண்ணச்சுவர்களில்
வாங்கி வந்த ஓவியங்கள்
தொங்கவிடப்பட்டும்
கிறுக்கல்கள் ஏதுமின்றி
"களை" குறைந்தே 
காண்கிறது
க(ஒ)ட்டிய புதுவீடு!

                       -காரஞ்சன்(சேஷ்)


திங்கள், 14 அக்டோபர், 2013

விஜயதசமி நல்வாழ்த்துகள்! -காரஞ்சன்(சேஷ்)



     வெண்தாமரைமேல் வீற்றிருக்கும் கலைமகளே!

      எந்நாவில் எழுந்தருள்வாய்; இன்கவிகள் இயற்றிடவே!

      உன்பாதம் பணிகின்றேன்! உவந்தருள் புரிந்திடுவாய்!
              
      உள்ளம் உயர்வடையும் உன்னருள் துணையிருந்தால்!
 
      ஞானம் அருளிடுவாய் ஞாலம் தழைத்திடவே!
                                                                                             
                                                                                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 12 அக்டோபர், 2013

பார்த்தேன்! இரசித்தேன்! படம் பிடித்தேன்! -காரஞ்சன்(சேஷ்)

                                                                                                           


                                                    
                                                              ஒரு இனிய உதயம்!


                                                 
                                                    மரமே மயிலோ?!


வெண்பஞ்சு மேகங்கள்!


தீபாவளி!

பூவரசங்குப்பம் லக்‌ஷ்மி நரசிம்மர்!
காண ஆயிரம் கண் வேண்டும்!

வெள்ளி, 4 அக்டோபர், 2013

தாயுள்ளம்!- காரஞ்சன்(சேஷ்)



வெண்ணிற மலர்தேடி
வண்டினம் பாடிவர
திகட்டாத தேனுண்ண
தேன்சிட்டும் தேடிவர
காகமொடு அணிலும்
களிப்புடன் கனிஉண்ண
வெயில் வேளைதனில்
விரிக்கின்றாய் நிழற்குடையை!

பறித்து பழம்தின்ன
சிறுவர்கள் பலர்கூட
இரவினில் வெளவால்கள்
பழமுண்ண உனைநாட

படைப்பின் நோக்கம்
பயன்பட வாழ்தல்
என்றுணர்த்தவோ
இத்தனையும் தாங்கி

சர்க்கரைப் பழமரமே-நீ
புத்தம் புதுமலர்களுடன்                                                                                                           புன்முறுவல் பூக்கின்றாய்?

-காரஞ்சன்(சேஷ்)
படங்கள்: காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வானும் நானும்! -காரஞ்சன்(சேஷ்)

வானும் நானும்!


பல்லுருவம் காட்டும்
பனிமேகங்கள்!

விண்ணெங்கும்
பஞ்சுப் பொதியாய்
நண்பகல் வெண்மேகங்கள்!



அதிகாலை, அந்திமாலை
வண்ணப் பூச்சாய்
கண்கவரும் மேகங்கள்!


எதிர்பார்ப்பை பொய்யாக்கி
காற்றின் கடத்தலில்
வேற்றிடத்தில் பொழியும்
கார்மேகங்கள்!


ஆறுதல் சொல்வாரின்றி
அழுது தீர்க்கும்
அடைமழை மேகங்கள்!


எல்லாம் கடந்ததும்
நிர்மலமான நீலவானம்
என்னிடம் உரைத்தது
எ(இ)துவும் கடந்து போகும்!




-காரஞ்சன்(சேஷ்)

படங்கள்: காரஞ்சன்(சேஷ்)
நீலவானம்:  நண்பர் இரவிஜி

வியாழன், 19 செப்டம்பர், 2013

தூய்மை! -காரஞ்சன்(சேஷ்)


                                                                 தூய்மை!

குப்பை மனங்களின்
கொடூரச் செயல்களால்
பள்ளிச் சிறுமியர்க்கும்
பாலியல் கொடுமைகள்!

மாசடைந்த மனங்களினால்
தேசமெங்கும் வன்முறைகள்!
தூய்மைப் படுத்த -நீ
துடைப்பம் ஏந்தினையோ?

தூய உள்ளங்களின்
துவளா முயற்சியில்
தீய உள்ளங்கள்
திருந்துமோ இனியேனும்?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சுழற்சி- காரஞ்சன்(சேஷ்)


                                                                சுழற்சி!
ஓடித்தேய்ந்து  உருமாறிய
சக்கரத்தின்  சட்டைகள்
ஓட்டி விளையாட
உங்களிடம் சக்கரமாய்!

பழையனவும் புதிதன்றோ
பயன்பாட்டுச் சுழற்சியிலே!

திசையைத் தேர்ந்தெடு!
விசையளி! விரைந்திடு!

இயக்குவிசை ஒன்றாலே
இயங்கும் விசை நாமன்றோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

சனி, 7 செப்டம்பர், 2013

பல்லாங்குழி! -காரஞ்சன்(சேஷ்)

                                                                    பல்லாங்குழி!


                                                                 
பாட்டியுடன் பெயர்த்தி
பல்லாங்குழி விளையாட
கடந்த காலங்கள் நம்
கண்முன் விரிகிறதே!

ஐந்து விரல்களுக்கும்
அதனாலே பலனுண்டு!
பசுவென்றும் கஞ்சியென்றும்
பலநிலைகள் அதிலுண்டு!

அந்நாளில்..

ஊடகங்கள் அதிகமில்லை
உறவுகள் அதிகமுண்டு!
கூடிக் களித்திருக்க
குழுமிய சிறார்களுண்டு!

விளையாடிக் களித்து
விரும்பிக் கதைகேட்டு
களைப்பின் மிகுதியில்
கண்வளர்ந்த காலமது!

முதிய தலைமுறைக்கு
கணினி விளையாட்டை
கற்பிக்கும் இந்நாளில்
இளைய தலைமுறை
இவற்றையும் விரும்பிடுமா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 31 ஆகஸ்ட், 2013

தென்னை! கவர்ந்தது என்னை! - காரஞ்சன்(சேஷ்)

 
                               
                         தென்னை கவர்ந்தது என்னை!

பெத்து வளர்த்ததெல்லாம்
சொத்தைப் பறிச்சுக்கிட்டு
சோறிட மறுக்கையிலே
வைச்சு வளத்தவங்க
வாரிசுக்கும் பயனளிச்சு
தன்னையே தருவதில்
தானுயர்ந்த தென்னை!

பாளைகள் படமெடுக்க
பசுங்குலைகள் அழகூட்ட
ஆரமென கீற்றிருக்க
அழகிய ஓர்வட்டம்!

வண்ணப் படத்தினிலே
வானுயர்ந்த தென்னை!
கண்டவுடன் கவிதைதர
கவர்ந்திழுத்த தென்னை!

-காரஞ்சன்(சேஷ்)

செய்தி: நன்றி-தினமலர் 31/8/2013
பட உதவி: மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!