திங்கள், 28 டிசம்பர், 2015

வீறு கொண்டு எழு மனமே!- காரஞ்சன்(சேஷ்)

                                             
                                வீறு கொண்டு எழு மனமே!

சேற்று வயலினிலே செந்நெல் விளைவிக்க
ஏரோட்டி, எருவிட்டு, நாற்றுநட்டு, நீர்பாய்ச்சி
நாளெல்லாம் உழைத்தாலும் பயிரிடையே வளர்கின்ற
களையெடுத்த பின்தானே காண்கிறோம் நல்விளைச்சல்!

பாடுபட்டு விளைத்த பயிரன்றோ சுதந்திரமும்!
ஊழல் வளர்தலும், சுற்றுச் சூழல் கெடுதலும்
தீயெனப் பரவும் தீவிரவாதமும், பாலியல் வன்முறையும்,
தேசத்தின் வளர்ச்சிக்கு தேக்கநிலை அளிக்காதோ?

வண்ணப் பறவைகள் வாழ்ந்திடும் கூடு!
நம்முள் பிரிவுகள் நீர்மேல் கோடு!
உறுபசியும், செருபகையும், ஒவ்வாப் பிணிகளையும்
வேருடன் களையெடுக்க விழைந்து முன்வருவோம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், உள்ளத்துயர்வே உயர்வென்ற
வள்ளுவப் பெருந்தகை வாக்கினை நாம்போற்றி
சிந்தையொடு செயலும் ஒன்றுபட உழைத்திட்டால்
விந்தைகள் பலவிளையும்! வீறு கொண்டு எழுமனமே!
                                                                                                     
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  -காரஞ்சன்(சேஷ்)