இணையத்தின்
சமூகப் பயன்பாடு!
முன்னுரை:
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதில் வாழும்
மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. நம்மிடையே பற்பல பிரிவினைகள்,
வேறுபாடுகள் நீர்மேல் கோடாய் இருப்பினும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு தனி மனிதன்
ஆற்றும் கடமையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. “தனிமரம் தோப்பாகாது”, “கூடிவாழ்ந்தால்
கோடிநன்மை”,”ஊரோடு ஒத்துவாழ்” என்ற பழமொழிகளுக்கேற்ப மனிதன் கூடிவாழ்வது சமூகமாகிறது. சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு
கல்வி அறிவு, தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவை முக்கியக் காரணிகளாகின்றன. இந்த
விஞ்ஞான யுகத்தில் தகவல் தொடர்பு எல்லா முன்னேற்றத்திற்கும் ஒர் ஆதார சுருதியாய் அமைந்துள்ளது.
கடிதப்பரிமாற்றம், அவசரத்திற்குத் தந்தி, தொலைபேசி வழி தகவல் பரிமாற்றம் (குரல் வழி),
தொலைநகல் இவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சியாய் கணினியின் வரவு அமைந்தது. அதன் பின்னர்
கணினிகள் பல பிணையங்கள் மூலம் ஒன்றிணைக்கப் பட்டு இணையம் உருவானது. அகண்ட அலைவரிசையின்
வரவு, பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கி உலகை ஊராய்ச் சுருக்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை
மாற்றி அமைப்பதில் இணையத்தின் வளர்ச்சி இக்காலத்தில் பெரும் பங்காற்றுகிறது. இந்திய
கவுன்சில் நடத்திய பொருளாதார உறவுகள் குறித்த ஆய்வு, இணையதள இணைப்பு 10% அதிகமாகும்போது
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 1.08 விழுக்காடு அதிகரிப்பதாகக் குறிப்பிடுகிறது. உலக
வங்கியின் அறிக்கை, வளரும் நாடுகளில் அகண்ட அலைவரிசை இணைப்பு 10% அதிகரிக்க, மொத்த
உள்நாட்டு உற்பத்தி 1.38% அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்துவதில் நம்நாடு
தற்சமயம் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், ஜூன் 2014ல் இரண்டாம் இடத்தை எட்டலாம் என்றும்
ஐ.எம்.எ.ஐ மற்றும் ஐ.எம்.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனிமனித, சமூக மேம்பாட்டில் இணையத்தின் பங்கு இன்றியமையாததாய் ஆகி, நம் அன்றாட
வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட நிலை உருவாகியுள்ளது.
இந் நிலையில், இணையத்தின் சமூகப் பயன்பாடு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
- விவசாயம்:
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்பது வள்ளுவரின்
வாக்கு. நம் நாடு விவசாய நாடு. கிராமங்களில் மக்கள் பெருமளவில் விவசாயத்தைத் தொழிலாகக்
கொண்டுள்ளனர். பெருகிடும் மக்கள் தொகைக்கேற்ப,
உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்காக பல
நவீன வேளாண் யுக்திகளைக் கையாள வேண்டியுள்ளது. மண்ணின் தரம்,தேவையான உரம், நீரின் தன்மை,
பயிர்களைத் தாக்கும் நோய்களைக் குறித்த விழிப்புணர்வு, தரமான விதைகள், விளை பொருட்களின்
அன்றாட விலை நிலவரம், விற்பனைச் சந்தைகள், பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண் வல்லுநர்களின்
ஆலோசனைகளைப் பெறுதல் போன்றவற்றிற்கு கிராமப்புற அளவில் இணையத்தின் பங்கு இன்றியமையாததாய்
உள்ளது என்பதை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்,சிலம்ப வேளாண்காடு என்ற சிற்றூரைச்
சேர்ந்த விவசாயி திரு. தனபாலசிங்கம் அவர்களின் பேட்டி மூலம் உணரமுடிகிறது. கிராமப்
புற மக்கள் மத்தியிலும் இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நம் நாட்டின்
முன்னேற்றத்திற்கு நல்லதொரு அறிகுறியாய்த் தெரிகிறது.
- கல்வி
“ஒருமைக்கண் தாம்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும்
ஏமாப் புடைத்து”
என வள்ளுவரால் சிறப்பிக்கப் பட்ட கற்றல்/கற்பித்தல் பணியில் இணையம் பெரும்பங்கு வகிக்கிறது.
பள்ளிகளில் வகுப்பறைகள் தற்காலத்தில் இணைய
இணைப்புடன் கூடிய கணினியோடு நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. “ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பதற்கேற்ப,
பாடப் பகுதிகள் பட வடிவில் மாற்றப்பட்டு, எளிய முறையில் கற்பிக்கப் படுகின்றன. பவர்பாயிண்ட்
போன்ற மென்பொருட்கள் வகுப்பறைகளிலும், கருத்தரங்குகளிலும் எளிய முறையில் விளக்க மளிக்க
, ஸ்லைடுகள்(slides) தயாரிக்க பெரிதும் உதவுகின்றன.
செந்தமிழ் ஓசையை உலகமெலாம் பரப்பி பாரதியின் எண்ணத்தை
ஈடேற்றுவதில் இணையம் பெரிதும் பயன்படுகிறது. கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள்
பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் “உத்தமம்” என்ற அமைப்பு உலகத் தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 12ம் உலகத்
தமிழ் இணைய மாநாட்டில், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு,”கையடக்கக் கணினிகளில் தமிழ்க்
கணிமை” எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
இணையவழிக் கல்வி
குறித்து சிறப்புக் கருத்தரங்குகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. தமிழிணைய பல்கலைக்கழகம்,
இணைய வழி தமிழ்க்கல்வி மட்டும் அல்லாமல், மின் நூலகம், மொழி ஆய்வு, தமிழகத்தின் கலாச்சாரச்
சிறப்புகள் பற்றி இணையத்தில் பதிவுகள் செய்து மரபுக் கல்வி நிறுவனமாக சேவையாற்றி வருகிறது.
இணையத்தில்
ஏராளமான கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், மின் நூல்கள், மின் நூலகங்கள், மின்பள்ளிகள்,
ஒலிநூல்கள் காணக்கிடைக்கின்றன.மொழிபெயர்க்கும் திறன் கொண்ட மென்பொருள்கள், யாப்பிலக்கணம்
கற்க மற்றும் எழுதிய பாக்களைச் செப்பம் செய்ய, பிழை நீக்க, அவலோகிதம் போன்ற மென்பொருள்கள், தட்டச்சு பயில மென்பொருட்கள், இசையைக்
கற்க, இசைக்கருவிகளைப் பயன்படுத்த வகைசெய்யும் பல மென்பொருட்கள், மருத்துவப் படிப்பிற்கு
உதவும் காணொளிகள், கணினிப்பயிற்சிக்கான காணொளிகள், பொறியியல் கல்வி பயில வகை செய்யும்
பல காணொளிகள் நிறைந்த கருவூலமாக இணையம் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
சங்க இலக்கியங்கள்,
சமய நூல்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளும் மின்னூல் வடிவில் “ப்ராஜெக்ட்மதுரை” என்ற வலைத்தளத்தில் தொகுக்கப் பட்டுள்ளன.
கட்டடக்கலை
பயில்பவர்களுக்கும் வழிகாட்டியாக இணையம் விளங்குகிறது. இதில் முப்பரிமாண, இருபரிமாண
வரைபடங்கள் மற்றும் கோட்டுப்படங்களையும் தயார் செய்யவும், தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து
இறுதி வடிவம் கொடுப்பதற்கும் பேருதவி புரிகிறது. “ஸ்வீட் ஹோம்(Sweet home)” போன்ற முப்பரிமாண மென்பொருள்கள், உள் வடிவமைப்பினை
(Interior Design) அனைவரும் செய்து பார்க்கும்
வகையில் எளிமையாக்கி உள்ளது. வேண்டிய வண்ணத்தில், நம் எண்ணம்போல் இந்த மென்பொருள் மூலம்
வீட்டை அமைத்துப் பார்க்க முடியும்.
வலைவாசல் என்னும்
சேவை, குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது துறை
என்று ஏதாவதொன்றை முன்னிலைப்படுத்தி அவை தொடர்புடைய தகவல்களை ஒருங்கிணைத்துத் தரவல்லதாக
அமைந்துள்ளது.
3. வர்த்தகம்.
சமீப காலங்களில்
நிகழ்நிலை இணைய வணிகத்தின் (ஆன்லைன் வர்த்தகம்) தாக்கம் அதிகரித்து வருகிறது. விலைவாசி
நிர்ணயத்திலும் இது பெரும்பங்கு வகிக்கிறது. பல நிறுவனங்கள் தம்முடைய பொருட்களை இணையத்தின்
வாயிலாக விளம்பரம் செய்து விற்கும் நிலை அதிகரித்துள்ளது. ப்ளிப்கார்ட்(flipkart),
இ-பே (e-bay) போன்ற தளங்களின் வாயிலாக நாம் வாங்கவிருக்கும் பொருட்களைத் தெரிவுசெய்து,
அனுப்பிவைக்க வேண்டுகோள் விடுக்க, பெறும் நேரத்தில் உரிய தொகையைச் செலுத்தும் வசதி
அமைந்துள்ளது.
கணினித் தொடர்பான
மென்பொருட்கள், வன்பொருட்கள், உதிரி பாகங்கள், கைப்பேசி, மடிக்கணினி, எண்ணியல் நிழற்படக்
கருவிகள்(digital camera)(காட்சிப்பேழை) மற்றும் திறன்பேசி போன்றவற்றின் விலைநிலவரங்களை
அறியவும், வாங்கவும் இணையம் பேருதவி புரிகிறது.
4. பணப் பரிமாற்றம்.
அனைத்து வங்கிகளுமே
தன் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப இணையத்தின் வாயிலாக பணப்பரிமாற்றம், கடன் தவணை
செலுத்தும் வசதி, பல்வேறு கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்தும் வசதியை அளிக்கின்றன.
இணையத்தின்
மூலம் நடக்கும் வர்த்தகத்தில் பற்றட்டை(Credit card) மற்றும் கடன் அட்டையை (Debit
card) உபயோகித்து உரிய தொகையைச் செலுத்தும் வசதியும் இருப்பதால் அந்த இடங்களுச்செல்லாமலும்,
அலுவலகநேரம் மற்றும் விடுமுறைநாள் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்குமிடத்தில்
இருந்தே இணையத்தின் மூலம் பயனடைய முடிகிறது. காப்பீட்டுத் தவணை செலுத்துதல் மற்றும்
காப்பீட்டுப் பயன் தொகை பெறுதல் போன்றவையும் இணையத்தின் மூலமே தற்போது நிகழ்கின்றன.
பயணத்திற்கான முன்பதிவு, பயணச் சீட்டு பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இணையத்தால் மிக எளிதாக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்க்கு இணையச்சேவை மிக்க பயனளிக்கிறது.
5. பொழுதுபோக்கு
உழைத்துக் களைத்தவர்க்கும்,
பணிச்சுமை மிக்கவர்க்கும் புத்துணர்வூட்டும் களமாக இணையம் திகழ்கிறது. பொழுதுபோக்கு
நிகழ்வுகள், விளையாட்டுகள், பாடல்கள், காணொளிகள், திரைப்படங்கள், நாடகங்கள், பல்வேறு
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான, நாம் காணத் தவறிய நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும்
வாய்ப்பினை வழங்குகிறது. பண்பாட்டுத் தாக்கத்தையும் இவற்றின் மூலம் ஏற்படுத்துகிறது.
கூகிள், முகநூல்(face book) போன்றவை தம் வெற்றிக்கு மிகை படைப்பாக்கச் சிந்தனையை அதிகம்
சார்ந்துள்ளன. இவற்றில் உள்ள விளையாட்டுகளால் பலர் ஈர்க்கப்படுவது உண்மை. யூ-ட்யூப்
போன்ற தளங்கள் பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், கண்டுகளிக்கவும்,
தரவேற்றம் மற்றும் தரவிறக்கம் செய்துகொள்ளவும்
வசதியளிக்கின்றன. எனவே இணையம் ஒரு இணையற்ற பொழுதுபோக்குச் சாதனமாய் அமைந்துள்ளது.
இணைய இதழ்களும்
தற்காலத்தில் இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வாசகர்களின் பின்னூட்டம்
இணைய இதழ்களுக்கு ஒரு முக்கிய உயிரோட்டம் அளிக்கிறது. பிரபலமான நாளிதழ்கள் கூட தற்காலத்தில்
இணைய இதழ்களாகவும் உருமாற்றம் செய்யப்படுகின்றன. இணைய இதழ்களில் வெளியிடப்படும் தகவல்கள்
அவற்றுக்கான சுட்டிகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
6. அரசுத்துறைகளில் பயன்பாடு (மின் ஆளுமை)
எல்லா அரசுத்துறைகளிலுமே
கணினியின் பயன்பாடு மிகுந்துள்ளது. அலுவலர்களின் பணிச்சுமையை வெகுவாகக் குறைப்பதில்
கணினி பெரும்பங்காற்றுகிறது. தலைமையகத்துடன் மாவட்டங்கள் இணையத்தின் மூலம் இணைக்கப்
படுவதால் தகவல் பரிமாற்றம் எளிதாகவும் உடனுக்குடனும் நடைபெறுகிறது. விரைவாக பல சேவைகளை
மக்களுக்கு வழங்கிட முடிகிறது. தேர்வு முடிவுகள், தேர்தல் முடிவுகள் அறிவதிலும் இணையத்தின்
பங்கு ஈடு இணையற்றது.
மதுரை மற்றும்
நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பயன்பாட்டுக்கு வந்த “தொடுவானம்” என்ற இணைய சேவை மூலம்
பொதுமக்கள் அரசுக்குத் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கும், நிவாரணம்
பெற்று பயனடையவும் ஏதுவாக அமைந்துள்ளது. நேரமும், செலவும், அலைச்சலும் இதன் மூலம் தவிர்க்கப் படுகிறது.
இன்று அரசின்
திட்டங்கள் மூலம் மக்கள் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. தற்காலிக
ஆதார் அட்டையை இணையம் மூலம் பெறும் வசதி உள்ளது. பிறப்புச் சன்றிதழ், இறப்புச் சான்றிதழ்
ஆகியன இணையம் மூலம் பெறும் வசதி பெருநகரங்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. வருமானவரி
விவரங்களை சமர்ப்பிக்கவும் இணையம் பயன்படுகிறது.
சுற்றுலாத்துறையில்,
முக்கிய சுற்றுலாத்தலங்கள் குறித்த விவரங்கள் கண்கவர் படங்களுடனும், விரிவான விவரங்களுடனும்
இணையதளங்களில் இடம்பெறச் செய்வதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் வரவு அதிகரிக்கிறது.
அதிக அளவில் வெளிநாட்டவர்கள் வருவதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிக்கிறது.
7. முகநூல்-வலைப்பூக்கள்-ட்விட்டர்-ஆர்குட் (உலகம் இதிலே
அடங்குது!)
(சமூக வலைத்தளங்கள்)
முகநூல்:
அரிய நிகழ்வுகள், படித்ததில் பிடித்த
பயனுள்ள செய்திகள், புகைப்படங்கள், நிகழ்வுகளின் நிழற்படங்கள் இப்படிப் பலவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் விருப்பங்கள், தேவைகள் முதலியவற்றை வெளிப்படுத்தவும்
உலகெங்கும்
உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் வகை செய்கிறது. குழுக்கள் அமைக்கவும்
இதில் வசதி உள்ளது. நட்பு வட்டத்தைப் பெருக்க முனையும்போது வள்ளுவரின் வழிகாட்டலின்
படி தெரிவு செய்ய, வீணான மன உளைச்சல் மற்றும் இழப்புகளைத் தவிர்க்கலாம். எச்சரிக்கையுடன்
கையாள, இது ஒரு பயனளிக்கும் சேவை என்பதில்
ஐயமில்லை!
அண்மையில், பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்த
அண்ணன் தம்பிகள் முகநூல் வழியாகத் தேடலில் ஈடுபட்டு இணைந்த நிகழ்வினை செய்தித்தாள்கள்
மூலம் அறிந்துகொண்டோம். என்னே ஒரு பயனுள்ள இணைய சேவை இது!
வலைப்பூ:
நம் ஆக்கங்களை
நம் விருப்பப்படி வெளியிடலாம். நாட்தாள், வார, மாத இதழ்களுக்கு அனுப்பினால் அவர்கள்
விருப்பப்படி குறைத்தோ, மாற்றியோ, நீக்கியோ வெளியிடுவர். படைப்புகள் வெளியாகாமலும்
போகலாம். நம் வெளிப்பாடுகளைச் சிதைவின்றி பகிர்ந்துகொள்ள, பிடித்த படைப்பாளர்களின்
வலைப்பூக்களைத் தொடர்ந்திட ,புதியவர்களின் அறிமுகம் கிட்டிட வலைப்பூ வழிவகுக்கிறது.
இது அச்சு வாகனத்தால் வெளியாகும் நூல் வடிவில் கிட்ட முடியாததாகும்.
டிவிட்டர்:
நாட்டு நடப்பு, உலக நிகழ்வுகள்
ஆகியவற்றை அறிய இது ஒரு முக்கிய
சாதனமாய்த் திகழ்கிறது. தனிப்பட்ட கணக்குகளை
நம் விருப்பப்படி பின்
தொடரலாம். இன்றைய போக்கை அறிந்து கொள்ள ஹேஷ்டேக் வசதி இதில்
உள்ளது.
ஆர்குட்:
ஜனவரி 22, 2004ல் கூகிளினால்
துவங்கப்பட்ட ஆன்லைன் நெட்வொர்க் இது.
இதைப் பயன்படுத்துவதில் ப்ரேசில் முதலிடம் வகிக்கிறது.
சமூக நிகழ்வுகளையும்
அது குறித்த தனிமனிதனின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் களமாகத் திகழ்வதால், அரசியல்
மாற்றம் நிகழவும் காரணமாய்த் திகழ்கிறது. ஆட்சியாளர்களும் மக்களின் மனநிலையை அவ்வப்போது
அறிந்து தங்களின் சேவையை மேம்படுத்தவும் வகை செய்கிறது.
8. வேலைவாய்ப்பு
இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள்
அதிகரிப்பதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற ஏதுவாகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் இணைய சேவை மையங்கள், இணைய
விளையாட்டு மையங்கள் போன்றவை இதில் அடங்கும். இம்மையங்களில் பாடல்கள், காணொளிகள் போன்றவற்றைத்
தரவிறக்கம் செய்து குறுந்தகடுகளில் பதிவு செய்து கொடுக்கும் பணியினையும் மேற்கொள்கின்றனர்.
மருத்துவத் துறையில் medical transcriptionன் போன்ற சேவைகளின் மூலமும், கால்சென்ட்டர்களின்
மூலமும் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.
9. தன்விவரக் குறிப்புகள் தயாரிக்க
வேலைதேடும் இளைஞர்களுக்கு தன் விவரக் குறிப்பை
தயார் செய்வதென்பது மிக முக்கியமானதாகும். அதற்கு உதவும் பல வலைத்தளங்கள் இணையத்தில்
உள்ளன. பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு தன்விவரக் குறிப்பைத் தயார் செய்ய அவை பெரிதும்
உதவுகின்றன. முகநூல் வாயிலாகவும் தன்விவரக்குறிப்பினைப் பகிர்ந்து பயனடைவோர் பலர்.
10. மின்னஞ்சல் சேவை.
விரைவான தகவல் பரிமாற்றத்தில் மின்னஞ்சல் மிகப்பெரும்
பங்காற்றுகிறது. முக்கியமான கோப்புகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. திறன் பேசி
மூலம் இணைய இணைப்பின் வழி “வாட்ஸப்” போன்ற வசதிகளோடு புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை
உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.
11. தொலைவில் இருந்தும்
அருகிலிருப்போம்! (காணொளி உரையாடல்)
பணிநிமித்தமாக வெளியூரில் இருப்பவர்கள், பொருளீட்ட
அயல்நாடு சென்றவர்கள், மேற்படிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கும் மாணவ
மாணவியர்கள், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் காணொளியுடன்
உரையாட இணையம் வகை செய்கிறது. யாஹூ மெசஞ்சர், கூகிள் டாக், ஸ்கைப் போன்ற மென்பொருட்கள்
இலவசப் பயன்பாட்டை அளிக்கின்றன. திரையில் தோன்றும் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள்,
குடும்பத்தாருடன் நினைத்த நேரத்தில் உரையாடுவது நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி பிரிவுத்துயரைக் குறைக்க வழி செய்கிறது.
பல அரசு விழாக்களில்
பல சேவைகள், அடிக்கல் நாட்டல், பாலங்கள் திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகள் காணொளி மூலம்
நடைபெறுகின்றன. உயர் அதிகாரிகள் பலர் இந்தச் சேவை மூலம் கிளை அதிகாரிகள் மற்றும் துணை
அதிகாரிகளுடன் உரையாடவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் இச்சேவை இணையத்தின் மூலம்
வகை செய்கிறது.
கொடிய குற்றங்களைப்
புரிந்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சிறைவளாகத்திலேயே நீதிமன்ற
விசாரணை நடத்த இந்தச் சேவை பெரிதும் துணைபுரிகிறது.
12. யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா? (வாழ்க்கைத்
துணை தேடல்)
இணையம் வழங்கும்
இன்னொரு மகத்தான சேவை இது. வாழ்க்கைத் துணையைத் தேட மற்றும் தெரிவு செய்யும் வசதியை
பல இணையதளங்கள் அளிக்கின்றன. எங்கே தேடுவேன்? எங்கெலாம் தேடுவதோ? என உளம் வாடுபவர்கள்
தங்களின் விவரம், வாழ்க்கைத் துணையாக அமையவேண்டியவர் குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றை
பதிவு செய்து கொள்வதன் மூலம் பலனடைகின்றனர்.
13. வாழ்விணையவர்க்கான முகநூல்
(couplestreet.com)
இரண்டுபேர்களுக்கான வலைப்பின்னல் என்று இதைக் கூறுவார்கள்.
முகநூல் பாணியில் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். குடும்பச் செலவுகளைத்
திட்டமிடவும் இதில் வசதிகள் உண்டு. அவசர உலகில்
மனம்விட்டு நிறை குறைகளைப் பரிமாறிக் கொள்ளும் நிலை அருகுவதால் இந்நாளில் புரிதல் குறைந்து
விவாகரத்து பெறும் சூழல் ஏற்படுகிறது.
வேடிக்கையாகச்
சொல்வதுண்டு. இணையத்தின் வழி ஏற்பட்ட முகமறியா நட்பில், கருத்துப் பரிமாற்றத்தில் ஒன்றுபட்டு
வாழ முடிவெடுத்து இருவர் சந்தித்தபோது அவ்விருவரும் கணவன் மனைவியாய் வாழ்ந்து விவாகரத்து
பெற்றவர்கள் என அறியநேர்ந்தது. பின்னர் அவர்கள் மனம் திருந்தி இணைந்து வாழ முற்பட்டதாகக்
கூறுவார்கள். மனம் விட்டு எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணையம் வழிவகை செய்கிறது.
14. மருத்துவம்.
பல மருத்துவமனைகள்
நாட்டின் பல பகுதிகளிலும் தத்தம் கிளைகளை அமைத்துள்ளன. சிக்கலான அறுவை சிகிச்சை, அவசர
சிகிச்சை போன்ற தருணங்களில் காணொளி வாயிலாக வேறிடத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களின்
ஆலோசனையைப் பெற இணையம் வழிவகை செய்கிறது. நவீன மருந்துகள், அவற்றின் பயன்கள் மற்றும்
பக்க விளைவுகள் குறித்தும் அறிய முடிகிறது. நோயின் அறிகுறிகள், தன்மைகள், தடுக்கும்
முறைகள் ஆகியவற்றைப் பற்றி இணையத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
15. தகவல் சேமிப்பு / மீட்பு /பகிர்வு
நம் கணினியில் உள்ள வன் தட்டு மட்டுமின்றி இணையத்தின்
வாயிலாக நம் தகவல்களைச் சேமிக்கும் வசதியை சில இணைய தளங்கள் வழங்குகின்றன. கூகிள் டிரைவ் இதற்கொரு உதாரணமாகும். அடிக்கடி
தேவைப்படும் நம் தனிப்பட்ட தகவல்கள், கோப்புகளை இதுபோன்று சேமிப்பதன் மூலம் தேவையான
தருணங்களில் எங்கிருந்தபோதும் எடுத்துக்கொள்ள வகை செய்கிறது. நம் கணினியில் இவை ஏதாவது
காரணங்களினால் அழிக்கப்பட்டுவிட்டாலும் மீட்பதற்கு வழி செய்கிறது. சேமித்த தகவல்களை
நமக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது.
பெரிய நிறுவனங்கள்
பலவும் முக்கியமான தகவல்கள், வாடிக்கையாளர் குறித்த விவரங்கள், கோப்புகள் ஆகியவற்றை
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இணையத்தின் மூலம் சேமித்து வைக்க ஏற்பாடு
செய்துள்ளன. பேரிடர் மேலாண்மை வகையில் இயற்கைச் சீற்றங்கள் அல்லது தீவிபத்து போன்ற
காரணங்களால் ஓரிடத்தில் தகவல்கள் அழிந்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கு இந்த முறை பெரிதும்
பயனளிப்பதாய் உள்ளது.
க்ளவுட் சேவைகள் (cloud computing) (கோப்புகளை மேகத்தில்
சேமிக்க)
ட்ராப் பாக்ஸ் போன்ற க்ளவுட் சேவைகள்
தற்போது பிரபலமடைந்து வருகின்றன. நம் கோப்புகளைச் சேமிக்க இலவசமான சேமிப்பு இடத்தைத்
தருகிறது. நமக்கென ஒரு கணக்கைத் துவக்கி, கடவுச்சொல் அமைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய கோப்புகளை பாதுகாப்பாக
சேமிக்க முடிகிறது. திறன் பேசிகளிலும் பயன்படுத்தும் வண்ணம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களாகவும்
வெளியிடப்பட்டுள்ளன.
இணையவாரி
வழங்கும் இலவச மென்பொருட்கள்:
இணையமும் ஒரு வள்ளலே! கட்டணமில்லாமல்
தரவிறக்கம் செய்து நம் தேவைக்கேற்ப மென்பொருட்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில்
அமைந்த திறந்தமூல (open source) மென்பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான கட்டற்ற
மென்பொருட்களையும் இணையம் நமக்கு வாரி வழங்குகிறது. உதாரணத்திற்குச் சில:
பிட்கின், தண்டர்பேர்டு-மின்னஞ்சல்களைக்
கையாள, ஓப்பன் ஆபீஸ்- அலுவலகப் பணிகளான, கடிதத் தயாரிப்பு, விரிதாள்கள், அதனைச் சார்ந்த வரைபடங்கள் தயாரிக்க
பெருமளவில் உதவும் மென்பொருள், VLC MEDIA PLAYER- ஒளி, ஒலி கோப்புகளைக் கையாள, ஜிம்ப்-உருவப்படங்கள்
உருவாக்கம் மற்றும் வடிவமைத்தல், ஜிப்- கோப்புகளைச்
சுருக்கிட பயன்படும் மென்பொருள். இதுதவிர நம் கணினியைக் காக்கும் இலவச ஆன்டிவைரஸ்,
மால்வேர், ஸ்பைவேர் தடுப்பு மென்பொருட்களும் இணையத்தில் கிடைக்கின்றன.
கூகிள்
வழங்கும் டூர் பில்டர், கூகிள் எர்த், ஸ்ட்ரீட் வியூ வசதிகள்
உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் எந்த இடத்தையும்
பார்க்கமுடியும். கூகிள் எர்த் சேவை பூமிப்ப்ந்தின்
தோற்றத்தை, விண்ணிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. டூர் பில்டர் என்ற வசதி மூலம் தங்கள் கதையை ஈணைய
வாசிகள் பகிர்ந்து கொள்ளலாம். சென்ற இடங்களையெல்லாம்
சுட்டிக்காட்டி, வரைபடமாக்கிக்கொள்ளவும் இந்தச் சேவை பயன்படுகிறது. செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்டும் வசதியையும்
இணையம் நமக்கு வழங்குகிறது.
தேடல்
என்பது உள்ளவரை வாழ்வில் சுவையிருக்கும்! (தேடு பொறிகள்):
தகவல் பெட்டமாகத் திகழும் இணையத்தில்
எங்கே எது கிடைக்கும் என்றெல்லாம் அறிந்துவைத்து, நாம் தேடும் நேரத்தில் நமக்குதவும்
தேடு பொறிகள் ஏராளம்! மிகப் பிரபலமான கூகிள் இதில் குறிப்பிடத்தக்கது. எந்த தலைப்பிலோ,
சொல்லைக் கொண்டோ, அது குறித்த செய்திகள், படங்கள், காணொளிகள், மின் நூல்கள் போன்றவற்றைத்
தரவிறக்கம் செய்து பயனடைய பெரிதும் துணை புரிகிறது.
இணையம்
சந்திக்கும் சவால்கள்.
ஊடுருவல், ஒற்றாடல், போரிடல் என்பன நாடுகளுக்கிடையில்
மட்டுமல்லாது, இணையத்திலும் நடைபெறுகிறது. தகவல்களைத் திருடும் விதமாக, மின்வெளி ஒற்றாடல்
தாக்குதல்கள் (cyber espionage attacks)நடத்தப் படுகின்றன. இதற்காகத் தயாரிக்கப்படும்
மென்பொருட்கள் நுட்பமாகவும், சிக்கலாகவும் வடிவமைக்கப் படுகின்றன. ஈரான் நாட்டின் அணுத்திட்டங்கள்
சீர்குலைக்கப் பட்ட கதை நாடறியும். இதற்காக ஸ்டெக்ஸ் நெட், டீக்யூ ஆகிய இரண்டும் பாதுகாப்புத்
துறையை அதிர்ச்சி அடைய வைத்த நச்சு நிரல்களாகும்.
குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள்
மூலம் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். சைபர் குற்றவாளிகளும் பெருகி வருகிறார்கள்.
வங்கிக் கணக்குகளில் மோசடி, போட்டி மற்றும் எதிரி நிறுவனங்களுக்குத் தகவல்களை விற்று
பணம் ஈட்டும் வர்த்தகக் கயவர்கள், நச்சு நிரல்களைப் பரப்பி அடுத்த நாட்டின் தகவல்களைத்
திருடி, கணினிகளை முடக்கும் சைபர் போராளிகள், அரசியல்,மதம், பொருளாதாரம் என ஏதாவது
ஒன்றில் நம் கருத்துகளைக் கேட்டு, அதனை இணையத்தில்
பரப்பி நம்மைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் தகவல் கயவர்கள் பெருகிவரும் நிலை சற்றே கவலையளிக்கிறது.
ஆனால் உலகெங்கும் உள்ள கணினி வல்லுநர்களும்
இதற்கான தற்காப்பு வழிகளைக் கண்டறிந்து அவ்வப்போது பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.
தகவல் என்க்ரிப்ஷன் போன்ற தக்க பாதுகாப்பு
மற்றும் பராமரிப்பு வழிமுறைகளுடன் இணையத்தை தகவல் பரிமாற்றம், கல்வி மற்றும் வர்த்தகத்திற்குக் கையாண்டால் அது ஒரு பலன் தரும் கற்பக விருட்சமாய்த்
திகழும் என்பதில் ஐயமில்லை.
முடிவுரை:
எங்கெங்குக் காணினும் சக்தியடா! எனப்
பாடிய பாரதி இன்றிருந்தால் எங்கெங்குக் காணினும் கணினியடா என்றும், காணி நிலம் வேண்டும்
என வேண்டியவர், இணையத்தில் இணைந்த கணினி வேண்டும் என்றும் பாடியிருப்பார். வரப்புயர என வாழ்த்திய ஒளவை இன்றிருந்தால் இணையம்
விரவுக என வாழ்த்தியிருப்பார். நன்மையும் தீமையும் நிறைந்திருந்தாலும், கனியிருப்பக்
காய்கவர்ந்தற்று என்ற நிலை கொள்ளாமல், பயனுள்ள விதத்தில் இணையத்தைப் பயன்படுத்த, நாம்
உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் என்பது திண்ணம்.
(தைப்பொங்கல் தினத்தையொட்டி நடத்தப்படும்
கட்டுரைப் போட்டிக்கான என்னுடைய கட்டுரை இது)- -காரஞ்சன்(சேஷ்)