திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் பகிர்ந்த ஓவியத்திற்கு என் மனைவி எழுதிய கவிதை இது!
இறையனார் கவிதையிலே
இடம்பெற்ற வண்டினமே!
கடிமலர்ச் சோலையிலே
காளையவன் வரவுக்காய்
காத்திருந்து பூத்தவிழி
காண வந்தீரோ?
பிரிவுத்துயர் போக்க
பரிவுடனே வருடலுடன்
நறுமண மலர்ச்சரத்தை
நங்கைக்கு அவன் சூட்ட
மலர்ந்த முகங்கண்டு
மயங்கிச் சூழ்ந்தீரோ?
நாணித் தலைசாய்த்து
நங்கையவள் புன்னகைக்க
புன்னகையைப் பூவென்று
எண்ணி விட்டீரோ?
எத்தனையோ மலரிருக்க
என்னவளை ஏன்சூழ்ந்தீர்?
மதுவின் மயக்கத்தில்
ஏதும் செய்வீரோ
என்றவனும் விரட்டுகிறான்!
வார்த்தையில் உரைத்திட
எண்ணத்தில் எழுந்தவற்றை
எழுதிவிட்டேன் கவிதையிலே!
- எழிலி சேஷாத்ரி
கவிதையை ஏற்று அவர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட திரு. வெங்கட்நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!