அப்பாவும் பிள்ளையும்
கோயிலுக்குப் போனார்கள். வெளியில் வந்தவுடன் அப்பா கேட்டார்... ''மகனே,
சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட?'' மகன் சொன்னான்... ''எனக்கு நிறையப் பணம்
கொடு, சாமின்னு வேண்டிக்கிட்டேன்.'' தொடர்ந்து பிள்ளை கேட்டான்... ''அப்பா!
சாமிகிட்ட நீங்க என்ன வேண்டிக்கிட்டீங்க?''
''எனக்கு நல்ல புத்தியக் குடு, சாமின்னு வேண்டிக்கிட்டேன்!'' என்றார் அப்பா.
பையன் சிரித்துவிட்டுச் சொன்னான்... ''நியாயம்தான். யாருக்கு எது இல்லையோ அதைக் கேக்கறதுதானே சரி!''
இதைப் படித்ததும் உங்களுக்குச் சிரிப்பு
வருகிறதுதானே? ''பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்'' என்று சிலர்,
சொல்லவும் செய்வீர்கள். ஆனால், இது நகைச்சுவையாகக் குறிப்பிடுவதற்கு நன்றாக
இருக்குமே தவிர, வாழ்க்கைக்கு நன்றாக இருக்காது.
சம்ஸ்கிருதத்தில் ஒரு பாடல் உண்டு...
'தெய்வம் யாருக்காவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால், அது கையில் ஒரு
குச்சியை எடுத்துக்கொண்டு வந்து அடிக்காது. மாறாக, அவன் புத்தியைக் கெட்ட
வழியில் திருப்பிவிடும்!’ என்பது அந்தப் பாடலின் விளக்கம்.
இதைப் புரிந்துகொண்டதால்தான், ''கடவுளே! எனக்கு நல்ல
புத்தியைக் கொடு!'' என்று வேண்டினார்கள் பெரியவர்கள். ''தெய்வமே! நான்
இந்தக் கத்து கத்துகிறேனே! கொஞ்சம்கூட உன் காதில் விழவில்லையா?'' என்றும்
உரிமையுடன் கேட்டு உறவாடினார்கள்.
இதேபோல அம்பிகையிடம் உறவாடி, உரிமையுடன் கேட்டு அழுது
பாடி முறையிடுகிறார் ஒரு மகாஞானி. அவர் பாடிய பாடல், ஈடு இணை சொல்ல
முடியாதது. எளிமையான தமிழ்ச் சொற்களால் அமைந்த தத்துவப் பாடல். அதை
எழுதியவரோ, பகுத்தறிவாளர்கள் என்று சொல்லப்படும் இறைமறுப்பாளர்களால்கூட
ஒப்புக்கொள்ளப்பட்டுப் பாராட்டப்பெற்ற ஒரு புண்ணியவான். அவர் யார் என்பதைப்
பிறகு பார்க்கலாம்; அவர்
சொன்ன தகவலை முதலில் பார்ப்போம்...
கதையைப் போல இருக்கும் கருத்துப்பேழை இது. முதலில் கதையைப் பார்ப்போம்; பிறகு, பாடல் எளிதில் விளங்கும்.
அது அமாவாசை இரவு. ஊரையே குத்தகைக்கு எடுத்ததுபோல,
இருட்டு மிரட்டிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்... ஒரு பெரிய வீட்டில்,
நடுவாக ஒரு விளக்கு ஒளிவீசிக் கொண்டிருந்தது. அது அபூர்வமான விளக்கு. அதன்
வெளிச்சம், வீட்டின் எல்லா அறைகளிலும் பரவி இருந்தது. அந்த வெளிச்சத்தில்
ஒவ்வொரு அறையிலும் முத்து, பவழம், வைரம், தங்கம், வெள்ளி, பணம் எனக்
குவியல் குவியலாக இருந்தது
தெரிந்தது. இவ்வளவு செல்வம் இருக்கும்போது, ஒரு பாதுகாப்பு வேண்டாமா?
அதற்காக, வாசலில் ஒரு பாதுகாவலரை
நியமித்திருந்தார்கள். அந்த வீட்டில் என்னென்ன, எங்கெங்கே இருக்கின்றன
என்பது அந்தப் பாதுகாவலருக்குத் தெரியும்.
அந்தப் பாதுகாவலையும் மீறி, அந்தச் செல்வங்களை
அப்படியே கவர்ந்துகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஐந்து திருடர்கள்
கிளம்பினார்கள்.
அமாவாசை இருட்டு அந்தத் திருடர்களுக்கு உதவியாக
இருந்தது. செல்வந்தரின் வீட்டை நெருங்கினார்கள். பாதுகாவலுக்கு இருந்தவரை
நெருங்கி மெள்ளப் பேச்சுக் கொடுத்து, அவரைத் தங்கள் பக்கம்
இழுத்துக்கொண்டார்கள். காவலாக இருக்க வேண்டியவர், கள்வர்கள் பக்கம்
சாய்ந்துவிட்டார்.
அதன்பிறகு, திருடர்களின் வேலை சுலபமாகப் போய்விட்டது.
எந்தெந்த அறையில் என்னென்ன இருக்கிறது என்று, ஒப்புக்குக் காவல்
இருந்தவாறே கள்வர்களுக்கு உளவு சொன்னார் அந்தப் பாதுகாவலர்.
விளக்கு
எரியும்போது, அதுவும் எல்லா அறைகளிலும் ஒளி வீசும் அபூர்வ விளக்கு
எரியும்போது எப்படித் திருட முடியும்? அதனால், அபூர்வமான அந்த விளக்கை
அணைத்தார்கள்.
அப்புறம் என்ன..? கொள்ளைதான்! வீட்டுக்காரர் தகவல் தெரிந்து அலறத் தொடங்கிவிட்டார். ஆனால், உதவிக்கு ஓடி வரத்தான் யாருமே இல்லை.
இனிமேல், இது கதை அல்ல. தயவுசெய்து மறுபடியும் ஒரு முறை படித்து, மனதில் பதிய வைத்துக்கொண்டு வாருங்கள்!
இந்தக் கதையில் வரும், அமாவாசை இரவு - அறியாமை; வீடு -
நம் உடம்பு; செல்வங்கள் - அமைதி, நிம்மதி, சந்தோஷம், ஆற்றல் போன்றவை;
ஐந்து திருடர்கள் - விஷய வாசனைகளைக் காட்டி, நம்மைக் கவிழ்க்கும்
ஐம்புலன்கள்; காவலர் - மனது; விளக்கு - அறிவு.
அறியாமை வசப்பட்டு, ஐம்புலன்களும் காட்டும் விஷய
சுகங்களில் ஆழ்ந்து போகிறோம். மனமும் ஐம்புலன்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு
எங்கெங்கு, எது எது கிடைக்கும், அதை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்று
பட்டியல் போட்டு நீட்டுகிறது. அறிவிழந்து போகிறது. அமைதி, நிம்மதி,
சந்தோஷம், ஆற்றல் போன்றவை நம்மை விட்டு விலகி மறைந்துபோகின்றன. உடல்
வேதனைகளும் மனவேதனைகளும்
அடித்துப் புரட்டி எடுக்கின்றன. தாங்காமல் ஓலம் இடுகிறோம்.
'கடவுளே! நான் கத்தறது உன் காதிலேயே விழவில்லையா? என்னைக் காப்பாத்து!’ என்று அழுது முறையிடுகிறோம்.
இதைப் பாடலாக எழுதியவர் வடலூர் வள்ளலார் என்று
போற்றப்படும் ராமலிங்க அடிகளார். குழந்தைகள் முதல் வேதாந்தக் கருத்துக்களை
அறிய விரும்பும் அறிஞர்கள் வரை அனைவருக்கும் தேவையானவற்றை எழுதியவர் இவர்.
இனம், மொழி, பணம், பதவி, புகழ் என எந்த வலையிலும்
அகப்படாத இவர், அறியாமை எனும் வலையில் அகப்பட்டிருப்பாரா என்ன? தான்
நடுங்கி ஓலமிடுவதாக அவர் கூறுவது நமக்காகவே!
வள்ளலார் பாடல்கள் மக்களிடையே பரவினால் வம்படி-
வழக்குகள் குறையும். அன்னையிடம் குழந்தை அழுது முறையிடுவதைப் போல
அம்பிகையிடம் அழுது முறையிடும் வள்ளலாரின் பாடல் இதோ...
மாயை எனும் இரவில்என் மனையகத்
தேவிடய வாதனை எனுங்கள்வர்தாம்
வந்துமன அடிமையை எழுப்பி அவனைத் தமது
வசமாக உளவுகண்டு
மேயமதி எனும் ஒருவிளக்கினை அவித்தெனது
மெய்ந்நிலைச் சாளிகைஎலாம்
வேறுற உடைத்துள்ள பொருள்எலாங் கொள்ளைகொள
மிகநடுக் குற்றுநினையே
நேயம்உற ஓவாது கூவுகின்றேன் சற்றும்
நின்செவிக்கேற இலையோ
நீதிஇலையோ தருமநெறியும் இலையோ அருளின்
நிறைவும் இலையோ என் செய்கேன்
ஆயமறை முடிநின்ற தில்லையம்பதி மருவும்
அண்ணலார் மகிழும்மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்தவல்லி உமையே!
- திருவருட்பா
மின் அஞ்சல் மூலம் பகிர்ந்த நண்பருக்கு நன்றி!