ஈற்றினிலே ஈரேழை ஏந்திவரும் புத்தாண்டில்
கற்கண்டாம் நல்வாழ்த்தைக் களிப்புடனே நவில்கின்றேன்!
எல்லாத் துறைகளிலும் எம்நாடு சிறந்ததென்று
சொல்லும் நிலையடைந்து சோதனைகள் விலகட்டும்!
இன்னலின்றி மக்களெங்கும் இன்புற்று வாழ்ந்திடவே
இயற்கைச் சீற்றங்கள் இல்லாமல் விலகட்டும்!
பொல்லாத நோய்களெலாம் போக்கிடமின்றி இனி
இல்லாமற் போனதென எல்லோரும் மகிழட்டும்!
கல்லாதோர் இல்லையென களிக்கின்ற நிலையடைய
எல்லா முயற்சிகளும் எம்நாட்டில் பெருகட்டும்!
அன்புளம் பெருகிவிட்டால் அனாதை யாருமில்லை!
வன்முறை நீங்கிவிட்டால் எங்கெங்கும் இன்பநிலை!
இல்லத்தில் துவங்கிடுதே இதற்கான முதல்நிலையும்!
வெள்ளை உள்ளத்தில் விதைக்கும் நற்சிந்தனைகள்
எல்லையிலாப் பயனளிக்கும்! என்றென்றும் உயர்வளிக்கும்!
புத்தாண்டு வாழ்த்துகளைப் புகன்றிடும் இந்நாளில்
நல்விதைகள் ஊன்றிடுவோம் நம்நாடு தழைத்தோங்க!
அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)