செவ்வாய், 29 ஜனவரி, 2013

குற்றமென்ன?-காரஞ்சன்(சேஷ்)

 
 
குற்றமென்ன? 
 
 
வளர்த்த மரமோ? வளர்ந்த மரமோ?
வளர்த்தவரோ?  வளர்ந்தவரே!
 
மழைவேண்டி மரபலியா?
பிழைசெய்யும் பெரியவரே!
 
மரமிழைத்த குற்றமென்ன?
மரத்தின் மீதேறி
சிரச்சேதம் செய்கின்றீர்?
 
முள்ளெடுக்க முள்ளெடுப்பார்!
இங்கோர் மரத்துண்டே
வெட்டும் கத்திக்கும்
விளங்கிடுதே கைப்பிடியாய்!
 
விலக்கிடுவோம் இச்செயலை!
விளங்கிடுவோம் சிறப்புடனே!
 
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி : கூகிளுக்கு நன்றி!
 
 
 


சனி, 26 ஜனவரி, 2013

வெற்றியின் குறியீடாய்! -காரஞ்சன்(சேஷ்)






விண்ணில் பறவைகள் பாரீர்
வெற்றியின் குறியீடாய்! 

உலகம் சுருங்கிடலாம்- மனித

உள்ளங்கள் சுருங்குவதேன்? 

ஒற்றுமையை வலியுறுத்தி- வானில்

உங்கள் அணிவகுப்போ? 

காற்றைக் கிழித்துப் பறப்பதொன்றும்

கடினமில்லை! ஒன்றிணைந்தால்! 

நற்றலமையின்கீழ் நாமெலா மொன்றுபட்டால்

வெற்றிக்கனிவந்து வீழாதோ நம்கையில்!

                                       -காரஞ்சன்(சேஷ்)

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)

பொங்குக பொங்கல்!

 



பொங்கும் மகிழ்வுடனே
பொங்கிடுக பொங்கல்!
மங்கலத் திருநாளாம்
மகிழ்வளிக்கும் பொங்கல்!
கதிரால் கதிர்விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
நற்பொங்கல் நாம்படைத்து
நன்றிசொல்லும் நாளான்றோ?


மாக்கோல ஒவியமும்
மாவிலைத் தோரணமும்
மங்கலத்தின் குறியீடாய்
எங்கும் நிறைந்திருக்கும்!
செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு அலங்கரிக்க
புதுப்பானை பொங்கலிட
புதுமஞ்சள் மாலையுடன்!

பொங்கிவரும் பாலில்
புத்தரிசி, வெல்லமிட்டு
"பொங்கலோ பொங்கல்" என
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!

உழவு உயர்வடைந்து
உலகில் தழைக்கட்டும்!
விளைபயிர்கள் உரிய
விலைமதிப்பை அடையட்டும்!
பொய்யாது வானொழுகி
புவிவளம் பெருக்கட்டும்!
கைவிரிக்கும் காவிரியும்
கரைபுரள பெருகட்டும்!

பொங்கிவரும் காவிரியால்
பொங்கல் இனி சிறக்கட்டும்!
ல்றுத் விளைநிங்கள்
ற்யிரால் ழைக்கட்டும்!
 
நம்பிக்கை மெய்யாகி
நற்பயன்கள் நல்கட்டும்!
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
பொங்கலோ பொங்கல்!
பொங்குக பொங்கல்!
                           -காரஞ்சன்(சேஷ்)

ஓய்வுண்டோ?-காரஞ்சன்(சேஷ்)



                      ஓய்வுண்டோ?


கயிற்றுக் கட்டில்மேல்
கால்மேல் கால்போட்டு
கனவில் ஆழ்ந்தீரோ?
மனக்கணக்கில் ஆழ்ந்தீரோ?

உழைப்பின் மிகுதியால்
உண்டான களைப்போ?
உழவுத் தொழிலின்மேல்
உள்ளத்தில் அலுப்போ?
 
வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுப் பசிபோக்க
போராடி நெல்விளைத்து- வைக்கோல்
போராக்கி வைத்துவிட்டீர்!
 
உழவே தொழிலென்று
உமைப்போல் பலருண்டு!
சார்ந்து இருப்பதிலும்
சங்கடம் மிகஉண்டு! 
 
இருப்பவர் இத்தொழிலில்
இயந்திரம் புகுத்திவிட்டார்!
இல்லாத உழவரெலாம்
சொல்லொணாத் துயரமுற்றார்! 
 
 வேற்று வேலைசெய்ய
விரும்பிச் செல்பவர்கள்
ஏற்ற கூலிதந்தும்-உழவை
ஏற்க வருவதில்லை! 
 
உழுபவன் கணக்கிட்டால்
உழக்கும் மிஞ்சாது!
உழுபவன் ஓய்ந்துவிட்டால்
உலகே இயங்காது!            

                          -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை!

வெள்ளி, 11 ஜனவரி, 2013

விதியின் கோடு!- காரஞ்சன்(சேஷ்)



                                      விதியின் கோடு!




ஆழ உழுததற்கு
அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள் நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலைஉயர
ஒருகோடு வரையாதோ?   
                           -காரஞ்சன்(சேஷ்) 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை. 

செவ்வாய், 8 ஜனவரி, 2013

நிஜமல்ல நிழல்!- காரஞ்சன்(சேஷ்)


நிஜமல்ல நிழல்!

கையில் மலரேந்தி 
கண்மூடி நிற்கின்றாய்!
நிழலாய்க் கரமொன்று
நீள்கிறதே உன்முன்னால்!

வாழ்க்கைப் பயணத்தில்
வழியெங்கும் நிழல்வலைகள்
வீழாமல் இருப்பதற்கு
விழித்திரு கண்ணே நீ!

                           -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை.

சனி, 5 ஜனவரி, 2013

காலக் கணிதம்! -காரஞ்சன்(சேஷ்)


காலக் கணிதம்!

கடன் வாங்கிக் கழித்தல்
காலத்தின் கணக்கிலில்லை! 
 
உறுப்பினராய் உள்ளவரை
நாலாறு மணிநேரம்
நாள்தோறும் நம்கணக்கில்! 
 
உழைத்து உயர்பவர்கள்
போதாது காலமென்பார்! 
 
உழன்று தவிப்பவர்கள்
போதாத காலமென்பார்! 

பொழுதைக் கழிப்பவர்கள்
போகாதோ காலமென்பார்!

வெற்றியில் திளைப்பவரோ
காலம் என் கையிலென்பார்!

வெற்றிபெறத் துடிப்பவரோ
எதிர்காலம் எமதென்பார்!

காலமோ என்றுமே
காத்திருப்பதில்லை யாருக்கும்!
                                                         -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 3 ஜனவரி, 2013

பாதை உறங்கியதோ?-காரஞ்சன்(சேஷ்)




                                                   பாதை உறங்கியதோ?

விண்முட்ட உயர்ந்த
விளக்குக் கம்பங்களோ
பாதையோரப் பனைமரங்கள்!

கண்கொள்ளாக் காட்சியென
கவர்கிறதே நம்மையெலாம்!

விண்வெளிப் பாதையெங்கும்
வெடித்த பஞ்சுகளாய்
வெண்மேகம் அலைந்திருக்க
பயணிப்பார் யாருமின்றி
பாதை உறங்கியதோ?

--காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!                 

செவ்வாய், 1 ஜனவரி, 2013

இருளும் ஒளியும்-காரஞ்சன்(சேஷ்)


இருள்  விலக்கும் ஆண்டாய் இருந்திடு புத்தாண்டே!

ஒருபுறம் ஒளியும்
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!
ஒளிவெள்ளம் பெருகிவர
ஒளியாத இருளுண்டோ?

எத்தகைய தடைவரினும்
ஏற்றுநீ எதிர்கொள்வாய்!
 எண்ணையும் திரியும்
இணைந்தெரிந்து இருள்நீக்க
காலத்தே ஏற்றிடு நீ
கல்வியெனும் நல்விளக்கை!

  
உன்போல் அறிவொளிகள்
உலகெங்கும் உதித்திட்டால்
கல்லாமை இருளெங்கும்
சொல்லாமல் அகலாதோ?
-காரஞ்சன்(சேஷ்)    

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை!