பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2017


பொங்கலோ பொங்கல்!













புவிவாழ மேழிதனை
புயமேந்தும் உழவர்கள்
தவிக்கின்றார் துயரினிலே
செவிமடுப்போம் துயர்களைய!

தீயினில் தூசாக
தீமைகள் மறையட்டும்!
போயின துயரென்று
போகியில் துவங்கிடுவோம்!

பகலவன் வரவாலே
பனிவிலகல் போலிங்கு
இனிவரும் நாளெல்லாம்
இன்பங்கள் பெருகட்டும்!

நீருண்ட மேகங்கள்
வேருண்ண நீர்தந்து
விளைச்சலைப் பெருக்கி -மன
உளைச்சலைப் போக்கட்டும்!

செந்நெல் பெருகி
மங்கல மஞ்சளொடு
பொங்கட்டும் மகிழ்வெங்கும்
பொங்கலோ பொங்கலென!

இனிவரும் நாளெல்லாம்
இன்பம்  பெருகவென்று
திளைத்திடுவோம் மகிழ்வினிலே
தித்திக்கும் பொங்கலுடன்!

துன்பமும் துயரமும்
தொலையட்டும் இந்நாளில்!
மங்கல ஒலியெழுப்பி
மகிழ்ந்திருப்போம் அனைவருமே!


வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து!-காரஞ்சன்(சேஷ்)





பொங்கலோ பொங்கல்!

 
 
செங்கரும்பின் சுவையுடனே
பொங்கட்டும் புதுப்பொங்கல்!
மங்கலங்கள் பலபெருகி
மக்களெலாம் மகிழ்வுறுக!

தலையாய உழவெங்கும்
தழைக்கட்டும் தரணியிலே!
மாசிலாச் சுழல்
மலரட்டும் புவியெங்கும்!

எல்லோர்க்கும் மகிழ்வளிக்கும்
இயற்கைவளம் காப்போம்!
பொங்கல் திருநாளில்
பொங்கட்டும் மகிழ்வெங்கும்!

பொங்கலோ பொங்கலென
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம் இந்நாளில்!
பொங்கலோ பொங்கல்!

--காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் வாழ்த்து!- காரஞ்சன்(சேஷ்)

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)
 பொங்குக பொங்கல்!
ஏரெடுத்துப் போராடி
பாரின் பசிபோக்க
ஓயாமல் உழைக்கும்
உழவர்களின் திருநாள்!
 
தென்னகத்து உழவன்
தன்னகத்தே கொண்ட
நன்றியெனும் உணர்வை
நவிலும் நாள்-பொங்கல்!

 
கதிரால் கதிர் விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
புத்தரிசிப் பொங்கலிட்டு
புகன்றிடுவான்- நன்றி!

மெழுகிய முற்றந்தனில்

மாவிலைத் தோரணங்கள்!
மாக்கோல ஓவியங்கள்!

செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு உடன் நிற்க
பொன்மஞ்சள் கழுத்தோடு
புதுப்பானை- பொங்கலிட!

பொங்கிவரும் பாலுடனே
புத்தரிசி பானைபுக
புதுவெல்லம் உடன்சேர
 
பொங்கி வரும் வேளை
"பொங்கலோ பொங்கல்!"என
மங்கல ஒலிஎழுப்பி
மகிழ்ந்திடுவீர் அனைவருமே!

மங்கலம் பொங்கியெங்கும்
மனைநலம் சிறக்கட்டும்!

உழவர்தம் வாழ்வு
ஒளிமயமாய்த் திகழட்டும்!
 
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
 
 
மண்ணின் வளம்பெருக்க
இந்நாளில் சூளுரைப்போம்!
 
செயற்கை உரம்மிகுந்தால்
சீர்கெடுமே விளைநிலங்கள்!
 
கூர்த்தமதி  நம்மாழ்வார்
கூறிய வழிபற்றி
இயற்கை உரமிடுவீர்!
வியத்தகு பயனடைவீர்!
 
பொங்குக பொங்கல்!  பொங்கலோ பொங்கல்!
 
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                
 
  -காரஞ்சன்(சேஷ்)
        படங்கள்: உதவிக்கு கூகிளுக்கு நன்றி