வெள்ளி, 11 மே, 2012

என்ன பார்வை உந்தன் பார்வை?- காரஞ்சன்(சேஷ்)

                                                என்ன பார்வை உந்தன் பார்வை?

முதுமை உடல்முழுதும்  முத்திரை பதித்தாலும்,
உழைக்கும்  எண்ணமது உதிரத்தில் ஊறியதால்
  நோக்கில் தெளிவோடு சாக்கில் கடைவிரித்தாய்!
          தேவைக்குப் பொருளீட்டத் தெருவோரம் கடைபோட்டு
       கொண்டுவந்த காய்கறியை கூறாக்கி வைத்துள்ளாய்!
ஆறு,குளம் வற்றிடலாம்! ஆழ்மனதில் ஈரமுண்டு!
           ஏரெடுத்துப் பிழைப்பவரை ஏறெடுத்துப் பார்க்கும்நிலை
  எப்போது வருமெனவே ஏங்கிடுதோ உன்பார்வை!
பார்க்கத் தெரிந்தால்தான் பாதை தெரியுமென
       நோக்கின்றித் திரிவோர்க்கு நுவலாதோ உம்வாழ்வு?
                                                                               -காரஞ்சன்(சேஷ்)

புதன், 2 மே, 2012

கனவு மெய்ப்படவேண்டும் -காரஞ்சன்(சேஷ்)

சுழலும் உலகத்துக்கு
உழவுதாங்க அச்சாணி!

உழவன் படுந்துயரம்
உலகம் அறியலையோ?

வறுமை அவன் வாழ்வை
வட்டமிட்டுத் தாக்குதுங்க!

மாறிவரும் பட்டியலில்
மாரியும் சேர்ந்திடுச்சு!

மும்மாரி பொழிஞ்சு
முப்போகம் விளைஞ்சகதை
எப்போதோ மாறிடிச்சு!
ஏத்தம், கவலையெலாம்
எந்திரமா மாறிடிச்சு!

ஊருக்கு நீர்சேர்க்க
உண்டியலாய்க் குளமிருக்கும்!

ஏரி குளமெல்லாம்
எப்போதோ வீடாச்சு!
நீர்வளம் குறைஞ்சு
நிற்கதியாய் நின்றாச்சு!

ஆழத் துளையிட்டு
அடிநீரை இறைத்ததனால்
கடல்நீர் உட்புகுந்து
களர் நிலமாயிடிச்சு!

சம்சாரம் இல்லேன்னா
சமாளிச்சு வாழ்ந்திடலாம்!
மின்சாரம் இல்லேன்னா
மிகக் கொடுமை ஆகுதிங்கே!

கால்நடை வளர்த்தோம்
கழிவெல்லாம் உரமாச்சு!
தழையுரமும் புண்ணாக்கும்
தந்ததையா மகசூலை!

தோட்டத்துக் காய்பறிச்சு
தொட்டுக்க கறிசமைச்சா
தூக்குமய்யா வாசம்
தூண்டிவிடும் எம்பசியை!

மாத்திரை மருந்தநம்பி
மனுஷ வாழ்விருக்கு!

வேதி உரமும்
வீரிய மருந்துகளும்
நிலத்தைக் கெடுத்து
நீர்குடிக்கச் செய்திடுச்சு!

விளையும் பயிர்மூலம்
வெவ்வேறு நோய்வருது!

விளைநிலத்தை யெல்லாம்
வீடாக்க வித்துப்புட்டா
கட்டிடங்கள் வந்து
கடும்பசிக்குச் சோறிடுமா?

உற்பத்தி செய்பவனோ
உழலுகிறான் வறுமையிலே
வாங்கி விற்பவனோ
வளமாய் வாழுகின்றான்!

செயற்கைக்கோள் செய்ஞ்சி
செலுத்துறாங்க வானத்தில்!
இயற்கை அழிவதையே
ஏன் தடுத்து நிறுத்தலையோ?


உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா!

அளவோடு விஞ்ஞானம்
அனுபவமும் சேர்ந்து
விழைந்து முன்வந்து
விவசாய்ம் செய்யவந்தா
தழைச்சு பயிர்வளரும்
தரணியெலாம் மனங்குளிரும்!
காலம் முடியுமுன்னே
கண்குளிரப் பார்த்திடணும்!


கனவு நனவாக
காலமே துணைநில்லு!
பொழுது சாயுமுன்னே
புறப்படுறேன் வீட்டுக்கு!
          
                                                    -காரஞ்சன்(சேஷ்)

படத்திற்கு நன்றி: கீதமஞ்சரி அவர்களின் வலைப்பூ

திங்கள், 30 ஏப்ரல், 2012

உயிரில் உயிரே! - காரஞசன்(சேஷ்)

ன்பே   அருகமர்ந்து
றுதல்மொழி கூற ஆறாத் துயருண்டோ?
னியவளே! இல்வாழ்வில்
டிலா மகிழ்வளிக்கும்
ற்றதுணை உன்னுடனே
டலன்றிப் பிணக்கேது?
த்தகைய துயர்வரினும்
ற்று அதைவெல்வோம்!
யமில்லை! அச்சமில்லை!
ன்றிய சிந்தையால்
ங்கு புகழ்எய்திடுவோம்!
ஒளவியம் அற்ற உன்மொழி ஒளடதமோ
கென எனைமாற்றி ஏற்றம் தந்திடுமே!

                                                                                              -காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 26 ஏப்ரல், 2012

நாளை நமதே!- காரஞ்சன்(சேஷ்)


             தழைத்திருந்த வேளையிலே
   கிளைக் கரங்கொண்டு 
வெயிலை நிழலாய்  
  வீழ்த்தி    நின்றிருந்தோம்!

       வாட்டிய "தானே" எம்மை
      கோட்டோவிய மாக்கியது!

நம்பிக்கை வேர்களால்
பூமியைப் இறுகப்பற்றி
   வாழ வரம் கேட்கிறோம்!

            கொஞ்சி மகிழ்ந்த பறவைகளே
   அஞ்சியதோ அருகில் வர?

மாலைக் கதிரவனோ
       மாறிடும் இந்நிலையென 
வண்ண முகம் காட்டி
      வானில் மறைகின்றான்!



                                                  நாட்கள் உருண்டோட
                                                  நாங்கள் துளிர்த்தெழுந்தோம்!

                                                        பாடும் பறவையினம் மீண்டும்
                                                        கூடி மகிழுதிங்கே

                                                        வாடும் மனிதர்களே!
                                                        பாடம் ஒன்றுரைப்பேன்!
                                                        காலம் மருந்தாகி
                                                        கடுந்துயர் கரைத்திடுமே!

                                                        நம்பிக்கை துணையானால்
                                                         நாளை நமதன்றோ!

                                                                                      -காரஞ்சன்(சேஷ்)
(தானே புயலின் தாக்குதலுக்கு உள்ளான மரம்-தற்போது மீண்ட நிலையில்
நான் எடுத்த படங்கள்)

வியாழன், 12 ஏப்ரல், 2012

வேர்களை மறவா விழுதுகள்- காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!

 கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலை மாறி
முதியோர் இல்லங்களை நாடி
முதுமைப் பருவத்தில் வாடும் பலர்
செல்லும் நிலை உள்ளது.

குடும்பப் பைகளின்
உறவு நூல் அறுந்து
உதிர்ந்த நன்மணிகளாய்ச் சிலர்.


தோட்டத்துச் செடிகளாய் இருந்தவர்கள்
தொட்டிச் செடிகளாய்!

இந் நிலையில் வேர்களை மறவா விழுதுகளாய் நாம் இருக்க வேண்டுகோளாய் இப்பாடல்!

(இளமை கொலுவிருக்கும்  ... பாடல் மெட்டில்)..

உடலில் வலுவிருக்கும் உளத்தில் தெளிவிருக்கும்
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே!

உடலில் வலுவிருக்கும், உளத்தில் தெளிவிருக்கும்,
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே

உயிரைச் சுமந்தவளும் தாயல்லவோ?
ஊட்டி வளர்த்தவளும் அவளல்லவோ?
பெற்று வளர்ப்பவர்கள் கண்ணல்லவோ?
பேணிக்காப்பது நம் கடனல்லவோ?
பொறுப்பைச் சுமந்து நமை போற்றி தினம் வளர்த்து
ஏற்றம் அளித்தவர்கள் இவரல்லவோ?-பெற்றோர்
போற்றி வணங்க வந்த உறவல்லவோ?

இயற்கை தந்த வரம் மூப்பல்லவா?  இது
நமக்கும் நாளை வரும் நிலையல்லவா?
குழந்தை  மனதைக் கொள்ளும் முதிய்வர்க்கே- நாம்
விழைந்து சேவை செய்ய ஒரு வாய்ப்பல்லவா?
இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? நாம்
வேர்களை மறவா விழுதல்லவோ?

                                                                        -காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 2 ஏப்ரல், 2012

மலருக்குத் தென்றல் பகையானால்?-காரஞ்சன்(சேஷ்)

மக்காக் குப்பை மிகுமானால்-மண்ணில்
மழைநீர் இறங்க வழி ஏது?

வெளிவரும் புகையே பகையானால்
வளியில் ஓசோன் நிலையாது!

பயிருக்கு மருந்தே பகையானால் -நல்
உயிரினம் வாழ்ந்திட வழி ஏது?

உடலுக்கு உணவே பகையானால்
உயிர் வாழ்ந்திடவே வழி ஏது?

அண்டை நாடுகள் பகையானால்
சண்டை நின்றிட வழி ஏது?

உறவும் நட்பும் பகையானால்
உள்ள அமைதிக்கு வழி ஏது?

இயற்கை வளங்களைக் காத்திட்டால்

இனிக்கும் வாழ்வு புவி மீது!

வெறுப்பெனும் உணர்வை விலக்கிவிட்டால்
செருபகை தருதுயர் இனி ஏது?

 -காரஞ்சன்(சேஷ்)

ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலா!- காரஞ்சன்(சேஷ்)

                                                                   நிலா!

பெற்றவளைச் சுற்றி
பிள்ளை வருவதுபோல்
கற்காலம் தொட்டு
கணிணிக்காலம் வரை
நிற்காமல் நீள்புவியை
நீ சுற்றி வருகின்றாய்!

சுழலும் இப்புவியைச்
சுற்றிவரும் வெண்ணிலவே!
என்னுடைய முன்னோரை
என்றோ பார்த்தவள் நீ!
அன்றுமுதல் இன்றுவரை
அனைத்தும் அறிந்தவள் நீ!
உன்னிடம் சிலகேள்வி
உண்மை உரைத்திடுவாய்!

பண்டைநாளில்..
படைகொண்டு மன்னர்கள்
சண்டையிட்டு மாண்டகதை
சரித்திரம் பறைசாற்றும்!

இந்நாளில்..

ஆறடி மனிதருக்குள்
அரையடிக்கு தினம் சண்டை!
விண்வெளியில் உன்னுடனே
எண்ணிலா விண்மீன்கள்
சண்டையிலா நிலை
சாத்தியமானதென்ன!

காரிருளைக் களைந்து
பேரொளி தருபவளே!
பாரில் மாந்தரின் மன இருளைப்
போக்கிட ஏன் மறந்தாய்?

கிண்ணம் நிறைய
உண்ணச் சோறிருந்தும்
தின்ன அடம்பிடிக்கும்
சின்னக் குழந்தைக்கு
அன்னையர் உன்னை
அழைக்கிறார் அமுதூட்ட!

ஓட்டை விழுந்த
ஒவ்வொரு குடிசையிலும்
அழையாமலே புகும் நீ
ஆறாத பசியால்
அங்கு அழும் குழந்தைக்கும்
கொஞ்சம் கொண்டுவந்து
கொடுக்க ஏன் மறந்தாய்?

சங்கப் பாடல்களில்
அங்கம் வகிப்பவளே!

பாடும் கவிஞர் உனைப்
பலவாறாய் அழைக்கின்றார்!

காட்சி பல அமைத்து
சாட்சி நீ என்கின்றார்!

பிரிவால் தவிப்பவர்கள்
ஏன் நிலவே? என்கின்றார்!
திருமணத் தம்பதியர்
தேன்நிலவே என்கின்றார்!
எல்லோர் கேள்விக்கும்
என்னபதில் சொல்கின்றாய்?

சேர்த்த செல்வத்தை சேமித்து வைக்காமல்
வாரியிரைத்து வள்ளலாக நினைத்தாயோ?
தழலை விழுங்கி தண்ணொளியாய்த் தருபவளே!
ஒருசில நாட்கள் ஓடி ஏன் மறைகின்றாய்?

ஓடும் நதியில், உவர் கடலில்
உன்முகத்தைப் பார்ப்பவளே!
மாறாது நீயிருக்க -புவி
மாற்றம் கண்டது ஏன்?
ஆர்ப்பரிக்கும் கடல்
ஆவேசம் கொள்வதும் ஏன்?

வாழ வழியிருந்தால்
வந்துவிடும் மாந்தரினம்
நிலவிவரும் சூழல்
நிம்மதியும் கெடுமெனவே
நீரையும் காற்றையும் நீ
நிரந்தரமாய்த் துறந்தாயோ?


                                                     -காரஞ்சன்(சேஷ்)
படம்:கூகிளுக்கு நன்றி!