செவ்வாய், 30 அக்டோபர், 2012

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!-காரஞ்சன்(சேஷ்)


 

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!

சிறுவயதுப் பருவங்கள் 
சிந்தையில் மலர்ந்தனவோ?

விடுமுறை நாட்களில்
விளையாடி மகிழ்ந்தகதை
நீங்காது இன்னும்
நினைவலையில் இருக்குதடி!

பூவரச இலைசுருட்டி
ப்பூ .ப்பூ ஊதிநின்றோம்!
முதிர்ந்தநுணாக் காய்களிலே
முக்கோணம் சதுரமென
தென்னங் குச்சிகளை
தேர்செய்யக் கோர்த்திட்டோம்!

உண்டாக்கிய தேரை
உவகையுடன் இழுத்திட்டோம்!
 
கல்லா? மண்ணா?வொடு
கண்ணாமூச்சி, பாண்டியென
களிப்புடன் விளையாடிக்
களைத்துத் திரும்பிடுவோம்!

 மணலில் வீடுகட்டி
மாளிகை என்றுரைத்தோம்!
எண்ணம்போல் கிறுக்கலுக்கு
ஏதேதோ பேர்வைத்தோம்!
 
காய்ந்த பனைஓலையிலே
கருவேல முள்ளிணைத்து
காற்றாடி சுற்றிடவே
கால்வலிக்க ஓடிநிற்போம்!

 பல்லாங்குழி, பரமபதம்
தாயம் இவையெல்லாம்
வெயில் மிகும்வேளை
வீட்டிற்குள் விளையாட்டு!

 திருவிழா நாட்களில்
தின்பண்டம் மட்டுமன்றி
வண்ணக் கண்ணாடியும்
வாங்கிட அடம்பிடிப்போம்!

வெள்ளரிப் பழத்தினிலே
வெல்லமும் சேர்த்துண்போம்!
வெண்ணிற நுங்குகளை
விரல்வழி உறிஞ்சிடுவோம்!

 கலந்த சோற்றிற்கு
கைநீட்டிக் காத்திருப்போம்!
வழங்கிடுவாள் அன்னை
வரிசையில் அமரவைத்து!

தும்பைப் பூத்தொடுத்து
துவளும் முறுக்குசெய்தோம்!
இந்தத் தலைமுறையில்
இவையனைத்தும் இல்லையடி!     
 
 -காரஞ்சன்(சேஷ்)
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தா! வரம்- காரஞ்சன்(சேஷ்)


                                                                          தா! வரம்!
  

தா! வரம்  தா! வரமென

வேண்டிடும் தாவரமே!

வேருக்கு நீர்பாய

வெயில் உன் கரம்பிடிக்க

பச்சையம் நிச்சயமே!


                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 26 அக்டோபர், 2012

த(ப)னித்தன்மை!-காரஞ்சன்(சேஷ்)





விண்ணில் மழைத்துளி
வண்ணம் காட்டும்
வானவில்லாகி
மழையெனப் பொழிந்து
வழிந்தோடி மறைகிறது!

மழையிலா மாதத்தில்
பிழையாமல் வரும்
பனித்துளியோ
தாவரங்களின் மேல்
தவழ்ந்து விளையாடி
தனித்தன்மை காட்டி
தாள் சேர்கிறது!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 25 அக்டோபர், 2012

சுட்ட ரொட்டி!-காரஞ்சன்(சேஷ்)

                                                    
                                                             சுட்ட ரொட்டி!

அழகு மலரொன்று
அடுப்பருகில் அமர்ந்ததென்ன?
 
வாடாமலர் இங்கு
வாட்டிடுதே ரொட்டிதனை!

சொப்பு விளையாட்டில்
ஒப்புக்குச் சமையலுண்டு!
 
உண்மைச் சமையல்தான்
உந்தன் விளையாட்டோ?

எதிர்பாரா அதிர்வலைகள்
ஏன் உந்தன் கண்களிலே?
 
எரிவாயு விலையேற்றம்
இதற்குள் அறிந்தாயோ?
 
எதிர்காலந்தனை ஏற்று
எதிர்கொள்ளத் துணிந்தாயோ?
                                                  -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  இணையம்

புதன், 24 அக்டோபர், 2012

படைப்பு!- காரஞ்சன்(சேஷ்)

                                                       
                                                                         படைப்பு!


படைத்தவனோ….
கொடியிடைதாளா
வடிவு தந்தெம்மை
உருளவிட்டான்
தரையினிலே! 

படைப்பவனோ …
பூசை முடிவினிலே
ஓசைவர ஓங்கிஎமை
உடைக்கின்றான்
சாலையிலே!

 உடைந்தழும் என்னாலே
உருளுகின்றார் பலர்தரையில்!
உருளுகிறது எம்தலைதான்
உருள்பவரின் மத்தியிலும்!

உடைபடவா பிறந்தோம்?
உரிய இடமளித்தால்
இடருண்டோ எம்மாலே?
இக்கணமே சிந்திப்பீர்!
                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

உறவுகள் தொடர்கதை!- காரஞ்சன்(சேஷ்)

                                                உறவுகள் தொடர்கதை!


ஏதோ ஒரு பறவையின்
எச்சம்வழி  வீழ்ந்தவித்தில்
விளைவனதான் விருட்சங்கள்!

பரந்தடர்ந்த கிளைகளிலே
பழங்கள் நிறைந்திருக்க
பறவைகளை வரவேற்று
பசிதீர்க்கும் நன்றியொடு!

பசிதீர்ந்த பறவைகளால்
பல்கட்டும் நல்விருட்சம்!

-காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 22 அக்டோபர், 2012

வாய்திறவாய்! -காரஞ்சன்(சேஷ்)

                                                                 
                                                                 வாய் திறவாய்!

மரப்பொந்தே மாளிகையோ?

வாயிலில் காத்திருக்கும்
வாய்திறந்து சேய்ப்பறவை!

சேயின் பசித்துயரை
தாயன்றி யாரறிவார்?

இரையெடுத்துப் பறந்து
விரைகின்றாய் பசிபோக்க!

ஊட்டிடும் காட்சி- தாய்
உள்ளத்தின் சாட்சி!

கொண்டை அழகியே!-நீ
கொத்திச் செல்கிறாய்
மரத்தோடு மனத்தையும்!

-காரஞ்சன்(சேஷ்)

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!