திங்கள், 5 மே, 2014

கைவண்ணம்! -காரஞ்சன்(சேஷ்)


அழுக்கு உடையுடனே
அழகோவியம்
வரைகின்றார்! 

வரைகையில் 
வானமும்  பூமியும்  
வசப்படுதே
 இவர் கையில்! 

எண்ணத் தெளிவாலே
வண்ணம் மிளிர்கிறது!

வாய்ப்புகள் பெருகி-இவர்
வாழ்வினிமை ஆகட்டும்!

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 4 மே, 2014

எண்ணக் கனவுகளோ? -காரஞ்சன்(சேஷ்)



                                                             எண்ணக் கனவுகளோ?


வண்ணப் புறாக்கள்

தன்னைச் சூழ்ந்திருக்க

வண்ணமலர் மங்கையவள்

என்ன இறைத்தாளோ?

 
கன்னத்தில் கைவைத்து

கனவுலகில் மிதக்குமவள்

எண்ணத்தில் தன்நினைவை

யார் இ(நி)றைத்துச் சென்றாரோ?

 -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

மஞ்சள் வெயில் மாலையிலே! -காரஞ்சன்(சேஷ்)

                                           
      
மஞ்சள் வெயில் மாலையிலே!
மஞ்சள் வெயில்.... மாலையிலே
மாங்குயில்கள்…,, கூவிடுதே!

கூவும் குயிலின் பாஷையில்
கூடி மகிழ  ஆசைகள்!
கூடிப் பறக்கும் பறவைகள்
கூடு திரும்பும் காட்சிகள்!

ஏதோ ஒரு ஏக்கம்
ஏனோ என்னைத் தாக்கும்!
                         (மஞ்சள் வெயில்)

கொன்றை மரங்களும் மஞ்சள் மலர்களை
எங்கும் இறைத்திடுதே! 
பூவின் இதழ்களைத் தாவும் அணில்களும்
தேடிச் சுவைக்கிறதே! 
வாசம் வீசும் பூவும் மலர்ந்ததே!
நேசக் கதைகள் பேசத் துடிக்குதே!

உள்ளத்தில் உன்னுடன் வாசம்
மனம் மெல்லவே உன்னுடன் பேசும்
சுகமே.... தருமே!  நினைவே…
                              (மஞ்சள் வெயில்) 

நெஞ்சம் முழுவதும் உந்தன் நினைவுகள்
தஞ்சம் புகுந்திடுதே! 
உனைக் காணும்பொழுதினில் மாலைக் கதிரவன்
நாணும் முகத்தினிலே!
நாளும் உன்னைக் காண ஏங்கினேன்!
நாணம் மோத நானும் தயங்கினேன்!

கோடையில் வெயிலின் தாக்கம்
கொட்டிடும் மழைவந்துத் தீர்க்கும்!
மழையாய்.. வருவாய்.. தருவாய்

                                 (மஞ்சள் வெயில்)
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

"உண்மை சற்றே வெண்மை" -சிறுகதை விமர்சனம்- இரண்டாம்பரிசு

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "உண்மை சற்றே வெண்மை" கதையின் விமர்சனத்திற்கு எனக்கு இரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

 
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


"உண்மை சற்றே வெண்மை" கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:


என்னுடைய விமர்சனம் இதோ:

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்றார் கவிமணி. ஆனால் இக்கதையோ காராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாகப் பிறந்துவிட்டேனே என தன் எண்ணக் குமுறலை வெளிப்படுத்தும்  பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்வவதற்காக  எழுதப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.


கதையின் ஆரம்பம் நம்மை ஒரு மாட்டுத் தொழுவத்தின் முன்னால் கொண்டு நிறுத்திவிடுகிறது.

"பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால் பசுவே நீ தரும் பால்..

உன்பால் உலகை உருகிடச் செய்யும் பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்

பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும் பந்தம் திருமகளே - இந்தப்

பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும் சொந்தம் குலமகளே"

எனும் பாடல் வரிகளை நினைவூட்டிச் செல்கிறது. பசுக்களை நன்கு பராமரிப்பதும், கன்றுகள் குடித்த பின் மீதமுள்ள பாலைக் கறந்து பயன்படுத்துவதாகக் காட்டியதிலிருந்து கதாநாயகியின் பெற்றோர் நல்ல இரக்ககுணமும், மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.

பசுக்களிடம் காட்டிய அக்கறையைத் தங்கள் அழகு தேவதையான ஒரே பெண்ணிடம் காட்டத் தவறவில்லை அவர்களது பெற்றோர். அவளைச் செல்லமாக வளர்த்து உரிய பருவத்தில் பொருத்தமான வரனைத் தேடும் முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.

பசுக்கள் வளர்ந்து, கருவுற்று, கன்றுகளை  ஈன்று பண்ணையாகி விட்டாலும் தனக்கென்று ஒரு வரன் மட்டும் இன்னும் அமையவில்லை என அப்பெண் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டும் இடமும்,   இரவு நேரங்களில் சில பசுக்கள் ஒருமாதிரி கத்தும்போது அவைகளால் தம் உணர்வை வெளிப்படுத்த முடிவதாகவும், தன்னால் அவ்வாறு வெளிப்படுத்தமுடியாதென எண்ணும் இடமும் எல்லோர் மனதிலும் நிச்சயம்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் பெற்றோர் தன் மகளுக்கு உரிய வரன் கிடைக்கவில்லையே என கவலைப்படுவதாக அமைத்ததிலிருந்து அவர்களின் பொறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தப் படுகிறது.

"பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. " எனத் தொடங்கும் வரிகளில் கதையின் முடிச்சு ஆரம்பமாகிறது.


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும், திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே! " என்ற வரிகளில் ஒரு திருப்பம் விளைகிறது.


பருவ வயதை எட்டியவுடன் மகனோ. மகளோ தம் பெற்றோர் தம்மிடம் முன்புபோல் அன்பாக இல்லையென எண்ணுதல் இயற்கைதான்.

இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்த பசுமாடு, கால்நடை வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றபின் இரவில் கத்தாமல் அமைதியாக இருந்ததையும், அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும்  குடிகொண்டிருந்ததையும், மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருந்ததையும் வைத்து தனக்கு ஏதோ புரிந்தும், புரியாமலும் இருப்பதாகக் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் வெகுளியானவளாகவும், பாலியல் விஷயங்கள் குறித்து அறியாதிருந்த நிலையும் வெளிப்படுத்தப் பட்டது மட்டுமல்ல  உரிய விதத்தில் பாலியல் குறித்தும், நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.

இக்காலத்தில் மாணவப்பருவத்திலேயே மகளிர் பள்ளிகளில் பாலியல் குறித்த இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியைகள் மூலம் வழிவகை செய்கிறார்கள். பாடத்திட்டங்களும் ஓரளவு இது குறித்த விஷயங்களை அறிய வைப்பதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பருவமடைந்த   குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக ஏற்பாடு செய்கிறார்கள். தாயாரின் பங்கு  இதில் மிகவும் அதிகம்.

காராம்பசுவின் வரவால் கதையின் முடிச்சு அவிழ்க்கப் படுகிறது. காராம்பசுவின் மடியில்    வெள்ளைத் திட்டுகள்  இருந்தும், அதன் அழகு கூடி, அதிக விலை போவதையும்,  தனக்கு அதே இடத்தில் ஒரு ரூபாய் அளவில் உள்ள வெள்ளைத்திட்டால் தன் திருமணம்  தடைபடுவதையும் எடுத்துரைப்பதில்தான் திருமணம தடைபடுவதற்கான காரணம் வெளிப்படுத்தப்படுகிறது.

மறைவிடத்தில் இருந்த தழும்பைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாயாரிடம்  மறைக்காமல் கூறியவிதம் பாராட்டத்தக்கது. கதாசிரியரும் அதை இலைமறை காயாக உணர்த்தியவிதம் அருமை.

இந்த இடத்திலும் சமூகத்திற்கு ஒரு செய்தியை உணர்த்த விழைவதாகவே தெரிகிறது. இன்றும்  இதுபோன்ற வெள்ளைப் புள்ளிகளையும், தழும்புகளையும் “வெண்குஷ்டம்” என்றே நினைத்து அக்குறைபாடுடையவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைக்கும் நிலையும், அவர்களின் திருமணத்திற்கு சிக்கல் உண்டாகும் நிலையும்  ஆங்காங்கே  நிலவுகிறது.


 இது ஒரு நிறக் குறைபாடு என்பதும் இதை “வெண்புள்ளிகள்”என்றே அழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு 2010ல் அரசாணை வெளியிட்டுள்ளது. வெண்புள்ளிகள் உள்ளவர்க்கு தற்காலத்தில் மகிழ்ச்சிதரும் செய்தி ஒன்றும் உள்ளது. நவீன சிகிச்சை முறைகள் மூலம் வெண்புள்ளிகளைக் குணப்படுத்த முடியும் என ஸ்டான்லி மருத்துவமனையில் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

இந்தக் கதையின் நாயகிக்கு அவள் பெற்றோர் அதற்கான சிகிச்சை அளிக்க முற்பட்டார்களா என்பதை எங்குமே குறிப்பிடவில்லை. இது ஒரு நோயல்ல. குறைபாடு என்பதை இந்த சமூகத்திற்குப் புரிய வைக்கவும், அதற்காக நவீன மருத்துவத்தில் ஏராளமான சிகிச்சை முறை உள்ளதென்பதையும் விளக்கும் வகையில் இந்தக் கதை உருவாக்கப் பட்டுள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது.

யாராவது ஒரு தூரத்து உறவினர் அல்லது மருத்துவர் அவளைப் பெண்பார்க்க வந்து அந்நோயைக் குணப்படுத்தி திருமணம் முடித்ததாகக் காட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.


சமுதாயத்தில் அதுவம் நடுத்தர மற்றும் வறுமையில் வாழ்பவர்களிடையே இதுபோன்ற குறைபாட்டுடையவர்களின் மனநிலையையும் அவர் படும் துயரங்களையும் விளக்கி இது ஒரு நோயே அல்ல, குறைபாடுதான் என்பதை விளங்க வைக்க முயற்சித்ததும் அருமை.

மொத்தத்தில் இதை ஒரு விழிப்புணர்வுப் படமாக எடுத்து சமுதாய்த்திற்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

கதாசிரியரின் படைப்புகள் யாவும் கற்பனைக் கதைகளாய்த் தோன்றாமல் சமுதாயத்தில் எங்கோ நடந்த நிகழ்வுகளை ஒட்டி அமைவதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்களை சித்தரிப்பதிலும், அதற்கான களத்தைத் தேர்வு செய்யும் விதத்திலும் நம் பாராட்டைப் பெற்றுவிடுவதிலும், அவர் சாதாரணமானவர் இல்லை, சாதிக்கப் பிந்தவர்தான் என்பது உறுதியாகிறது.

-காராஞ்சன்(சேஷ்)

வியாழன், 24 ஏப்ரல், 2014

வாக்களிப்போம் என வாக்களிப்பீர்!- காரஞ்சன்(சேஷ்)









தேசத்தின் வளர்ச்சிக்கு
தேர்தல் ஒரு தேர்வு!
வாக்குகளைப் பெற வேண்டி
வாக்களிப்புகள் ஏராளம்!

ஒவ்வொருவர்
வாக்கினிலும்
ஒளிந்திருக்கும்
எதிர்காலம்!

களைகளைக் களைந்திட
கறைகளை அகற்றிட
அக்கறையொடு
ஆட்காட்டி விரலில்
கறை ஏற்போம்!

உரிமையை நிலைநாட்டி
உவகையுடன் வாக்களிப்போம்!
தேர்தலின் முடிவில்
தேசநலன் சிறக்கட்டும்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

இன்னுயிர் காக்க இனியேனும் விதி செய்வோம்! -காரஞ்சன்(சேஷ்)


குழந்தைகளுக்குத் தோண்டிய
குழிகளா ஆழ்துளைக் கிணறுகள்? 
நித்தம் ஒரு விபத்தா?
நெஞ்சம் துடிக்கிறதே!
 
ஏதும் அறியாக் குழந்தைகள்
ஏன் பலியாக வேண்டும்?
பலமணிநேரப் போராட்டம்
பலனின்றிப் போகிறதே!
 
நீரில்லையெனில்
நிரந்தரமாய் அதைமூட
விதிகள் வகுத்தால்
விளையாட்டுக் குழந்தைகள்
வீழ்வாரோ அதனுள்ளே?
 
இன்னுயிர்கள் பலகாக்க
இனியேனும் விதிசெய்வோம்!

அனுமதியுடன்தான் இனி
ஆழ்துளைக் கிணறுகள்!
மூடாமல் விடுபவர்தாம்
முழுப்பொறுப்பு விபத்திற்கு!
  -காரஞ்சன் (சேஷ்)

திங்கள், 14 ஏப்ரல், 2014

"நாவினாற் சுட்ட வடு"- சிறுகதை விமர்சனத்திற்கு முதற்பரிசு! - காரஞ்சன்(சேஷ்)

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு முதல்  பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு மீண்டும்  ஒருமுறை கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


நாவினாற் சுட்டவடு கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-01-03-first-prize-winners.html

என்னுடைய விமர்சனம் இதோ:

மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது  பேச்சும், நகைச்சுவை உணர்வும்தான்.  எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறரோடு பேச்சின் மூலம் பகிர்ந்துகொள்ள  உறுதுணையாக இருக்கும் நாவிற்கு, வள்ளுவர் தனி அதிகாரம் அமைத்து முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்தே அதை அடக்கி ஆள வேண்டியதன் அவசியம் வெளிப்படுகிறது. தலைப்பைப் பார்த்தவுடன்  கதை நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.

இன்றும் கூட கிராமங்களில் “வார்த்தையைக் கொட்டிவிட்டால் வாரமுடியாது” என்ற பழமொழி வழக்கில் உள்ளது. எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இவற்றைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும். நாவடக்கம் எந்தச் சூழலிலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைக்கு  “நாவினால் சுட்ட வடு” என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 
வாழ்வின் பேரின்பம் மழலைச் செல்வங்கள்தான். அது இல்லாத இடங்களில் ஆயிரம் செல்வமிருப்பினும் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது.  தன் கல்லூரித் தோழியான ரேவதி தன் நாத்தனார் குழந்தைகளுடன் தன் வீட்டிற்கு வரும்போதெல்லாம், அந்தக் குழந்தைகளின் சேட்டையால், ஒரு சலிப்பும், பயமும் அடைந்தாலும்,   குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என எண்ணும் பாங்கும், அவர்களுக்குப் பிரியமான உணவுகளைத் தயார் செய்து வைத்துவிட்டுக் காத்திருப்பதிலும்  குழந்தைகள் மீது கதாநாயகிக்கு ஒரு அக்கறை இருப்பதை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளது. குழந்தைகளின் குறும்புகளை விவரிக்கும்போது ஆசிரியர் அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அவர்களுக்குப் பிடித்தமான உணவுவகைகளையும் பட்டியலிட்டவிதம் அருமை!
குழந்தைகள் மிகவும் இயல்பானவர்கள். தாம் செல்லும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் உடனே ஒன்றாய்க் கலந்து விளையாட ஆரம்பிக்கும் இயல்புடையவர்கள். அவர்கள் தனித்து விடப்படும்போது, பிறர் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காக கையாளும் வழிமுறைகள் தர்மசங்கடமாக சிலருக்குத் தோன்றுகின்றன. தோழியின் வருகையால் தான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது தடைபடுமோ என்று எண்ணி வெளிப்படையாகவே அது முடிந்ததும் வரச் சொல்வதும், அன்றைய தினம் மதிய உறக்கம் கெட்டுவிடும் என நினைப்பதும் ஒரு சராசரிப்பெண்ணின் சின்ன சின்ன ஆசைகள் கதாநாயகிக்குள் இருப்பதை அழகாக வெளிக்கொணரும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
தான் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டிய, தான் இந்த இடத்தில் வாழ்க்கைப்பட உதவிய தன் தோழி ரேவதிக்கும் குழந்தை பாக்கியம் இதுவரை இல்லாதிருப்பதை எண்ணி  தானும் அவளும் ஒரே நிலையில் இருப்பதை நினைத்து அல்ப சந்தோஷம் அடைவதும், தனக்கு ஒன்றுக்கே வழி இல்லாதபோது சிலருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தையாகப் பிறப்பதை எண்ணி ஆதங்கப் படுவதிலிருந்தும், மழலைச் செல்வம் இல்லாததால் மனதில் குடிகொண்ட ஏக்கத்தையும், பெற்றவர்களைப் பார்த்து பெருமூச்செறியும் சராசரிப் பெண்ணாகிவிடுவதை வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு தொட்டில் இடும்போது, குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்கள், அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம்  செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று, கூடியிருந்த வயதான பெண்மணிகள் கூற, மறுமனை என்ற பெயரில்  பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, இவர்களுக்கும், மாலையிட்டு, கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விடுகின்றனர். பலமுறை இப்படி நிகழும்போது அதனால் அந்தப் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை கதாநாயகி   தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துவதாய் அமைத்து  அத்தகைய செயல்களைத் தவிர்க்கலாமே என சமுதாயத்திற்கும் ஒரு சாட்டையடி கொடுத்துள்ளார்.
குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொருவர் வெவ்வேறுவிதமான ஆலோசனைகளையும், சம்ப்பிரதாயமான  தீர்வுகளையும் சொல்லும்போதும், பிறர் பார்வையில் அவர்கள் ஒரு காட்சிப்பொருளாக ஆகநேர்கையில்  அவர்களின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதை தனக்கே  உரித்தான பாணியில் எடுத்துரைத்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அயர்ந்து  உறங்கிய குழந்தையால் நேரம்போவது தெரியாமல் அளவளாவிய தோழிகள், சத்தம் கேட்டவுடன் படுக்கையறையில் இருந்த மடிக்கணினியை கீழே இழுத்துத் தள்ளியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாலும், ரேவதி நான் வருகிறேன் என்று கூறி அசட்டையாக அகல்வதும், அதனால் கதாநாயகி எரிச்சல் அடைவதும் சராசரிப் பெண்களின் வாழ்வில் நிகழ்வதுதான். கணவரின் மடிக்கணினியை இயக்கத் தெரியாது அப்படியே முயற்சித்து ஏதாவது பழுதாகிவிட்டாலென்னசெய்வது என எண்ணும் இடத்தில் கதாநாயகியுடைய தாழ்வு மனப்பான்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
கணவரிடம் அந்நிகழ்வை உரைப்பதற்கு கதாநாயகி பீடிகை போடுவதும் அருமை! அவர் மனம் நோகாத வகையில் அதை வெளிப்படுத்த நினைத்ததும் அருமை.   வீட்டிற்குச் சென்றபின் ரேவதி தன் தோழியிடம் மடிக்கணினிக்கு ஏதாவது சேதம் விளைந்ததா என வினவியிருக்கலாம்.  இதுபோன்ற நிகழ்வுகள் யாருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்காக தோழியின் செயல்பாடு  அமைக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அசட்டையாய் அகன்ற ரேவதிக்கு, தன் கணவர் தொலைபேசியில்,  தன் மடிக்கணினிக்கு எள்ளளவும் சேதமில்லை என உரைப்பதைக் கேட்டு மனதிற்குள் தனக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவளிடம் கனிவுடன் தன் கணவர் பேசுவதாக ஆதங்கப் படுவதாய் அமைத்தது நியாயமான நிகழ்வுதான்.
”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான் .....  விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே”   என்று கணவர் கூறும்போது, தன்னில் பாதியான தன் மனைவியின் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்  என உணரத் தவறி விட்டார்.
 ஒருவேளை மடிக்கண்ணிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இதே வார்த்தைகள் வெளிப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும் குழந்தையில்லாமல் போனதற்கு மனைவி மட்டுமே காரணம் என அவர் எண்ணுகிறாரா? அவரிடமும் குறைகள் இருக்கலாம் அல்லவா?
மடிக்கணினி உடையாததைப்பற்றி மகிழ்வடைந்த கணவர் தன் மனைவியின் மனம் உடைந்ததை உணராதது கொடுமை!
மொத்தத்தில் இந்தக் கதையில்  குழந்தைகளின் குறும்புகள், குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தைகளை வரவேற்கக் காத்திருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்றவை மிகவும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.
நாம் சொல்லும் சொற்கள், சொல்லும் சுழ்நிலைகள் மற்றும்  சொல்லும் விதத்தைப் பொறுத்து பிறர் மனத்தை எப்படி பாதிக்கும் என்பதை அருமையாக விளக்கி “நா காக்க” என அறிவுறுத்துகிறார் கதாசிரியர். குழந்தையில்லாதவர்களுக்கு, சில சடங்குகளில் அவர்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்துவதால் அவற்றின் மீது அவர்கள் நம்பிக்கை இழப்பதும், செய்யச் சொல்பவர்களின் மீது வெறுப்புணர்ச்சி கொள்வதும் நிகழும் என்பதை அழகாக விளக்கி அவற்றைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார்.
அருமையான  இந்தக் கதையைப் படைத்த ஆசிரியருக்கு என் பாராட்டுகள்!
- காரஞ்சன்(சேஷ்)

என்னுடன் பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! நன்றி!