தூணில் உதித்த தூயோனே போற்றி! -
(200 ஆவது பதிவு)
(200 ஆவது பதிவு)
காலைக் கதிரவனும்
கடலிடை எழுகின்றான்!
சோலை மலர்களெலாம்
மாலையாய்த் தோள்சேர
மலர்ந்தெங்கும்
சிரிக்கிறதே!
அதிகாலைப் புள்ளினங்கள்
துதிபாடித் துயிலெழுப்ப
திருவடி தொழுதிடவே
தேடிவந்து தினந்தோறும்
நின்ஆலய வாசலிலே
நிற்கின்றோம் அனைவருமே!
ஆணவத்தை அழிக்க
அவதரித்த திரு
உருவே!
தாமரைக் கண்திறந்து
தயை புரிவாய் எங்களுக்கே!
ஒருகண்ணால் உனைநோக்கும்
உத்தமியின் திருவிழிகள்
நித்தமும் எங்களுக்கு
நிம்மதியை அருளாதோ?
நாளை என்பதே
நரசிம்ம ரிடமில்லை!
எங்கும் உறைபவன்
நீ!
இல்லாத இடமில்லை!
காண்பவர் கவலையெலாம்
களைந்திடும் மாமணியே!
நான்காம் அவதாரமே!
நாங்களெலாம் நின்பிள்ளை!
என்ன பிழை யாம்
செய்தோம்?
ஏனிந்த பெரும்
துயரம்!
நாடிவந்தோம் நின்னருளை
நல்கிடுவாய் நரசிம்மா!
சேயாம் எங்களுக்கு
தாயாய் அருள்பவன்
நீ!
எந்தை முன்னோரும்
ஏத்திட்ட தந்தை
நீ!
வேள்வித் தீயினிலே
விளைந்தெழும் உருவில்
நீ!
எங்கும் நிறைந்தவன்
நீ!
எதிலும் உறைபவன்
நீ!
வரத்தில் அடங்காத
வடிவம் பெற்றவன்
நீ!
கருணைக் கடலும்
நீ!
காப்பாற்ற வந்தவன்
நீ!
சரணாகதி யென்றோர்க்கு
சகலுமும் அருள்பவன்
நீ!
நின்திருவிழிகள்
அருளாலே
தீவினைகள் அகலாதோ?
விண்ணளந்த பெருமாளே!
விழைந்தெமக்கு
அருள்செய்வாய்!
-காரஞ்சன்(சேஷ்)
படம்: பூவரசங்குப்பம் அருள்மிகு அமிர்தவல்லி நாயிகா சமேத ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.

.jpg)





