இதயத்தில் ஓர் உதயம்!
படிந்த புழுதியை
எப்போதாவது வரும் மழை
கழுவிக் களைவதைக்
கண்டு களிக்கையில்.....
முகமறியா மனிதர்களை
சுகமான குரலால்
துதிபாடித் துயிலெழுப்பும்
குயிலோசையைக் கேட்கையில்..
குரைத்துத் துரத்தும்
நாய்களுக்கிடையில்
எனைப் பார்த்து
வாலாட்டும் நாயினைக் காணநேர்கையில்.....
விரிந்த வானில்
இருளும் வேளையில்
தனித்துப் பறக்கும்
பறவையைப் பார்த்து வியக்கையில்....
ஒடுங்கிய தேகமும்
இடுங்கிய கண்களுமாய்
"இரட்டை மல்லி" எனக்கூவி
விற்கும் கிழவியை வியந்து பார்க்கையில்...
கடந்து செல்லும் ஊர்தியில்
கையசைத்துச் செல்லும்
மழலைச் செல்வங்களின்
மலர்ந்த புன்னகை மகிழ்வளிக்கையில்....
இன்னும் பல்லாண்டு
இவ்வுலகில் வாழ
ஆசை என்மனத்துள்
அன்றாடம் மலர்கிறது!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!