ஞாயிறு, 31 மார்ச், 2013

அன்னத்தின் எண்ணம்!- ஓவியக் கவிதை!-காரஞ்சன்(சேஷ்)

                                           
                                              அன்னத்தின் எண்ணம்!

வன்னமிகு அன்னமே!

     கயல்களெலாம் எந்தன்
     கண்ணசைவில் மயங்கிநிற்க,
     கூவிமகிழும் குயிலினமென்
     குரல்கேட்கக் காத்திருக்க
     எண்ணம் உரைத்திட -நீ
     எந்தூதாய் வருவாயா?
 
ஏந்திழையே!

                 உன்னுள்ளம் நிறைந்தவர்க்கு
                 உன்நிலையை நானுரைப்பேன்!
                 திரும்பிடுவார் விரைவினில்
                 திண்ணமிது! கலங்காதே!

                 தூதுசெல்லும் எங்களுக்கும்
                துயருண்டு மனதினிலே!
                எங்கள் மனத்துயரை
                யாரிடம் யாமுரைப்போம்?

                 அன்னம் உரைத்தமொழி
                ஆயிழைக்கு வியப்பளிக்க
                என்னென்று அறிந்திட நான்
                ஏனோ தலைப்பட்டேன்!

     அன்னத்தின் மொழிகேளீர்!              

               எண்ணம் உரைத்திட
               எங்களைத் தூதுவிட்டீர்!
               இன்னுமொரு நூற்றாண்டில்
               எங்களின் நிலைஎதுவோ?

              விஞ்ஞான வளர்ச்சியிலே
             வியனுலகும் சுருங்கிடலாம்!
             விரல்நுனியில் உலகிருக்க
             அன்னத்தைத் தூதுவிட
             அந்நாளில் யார்வருவார்?

             பெருகிடும் குடியிருப்பால்
            அருகிடுமே நீர்நிலைகள்!
            காவியக் கதைகளில்தான்
            ஓவியமாய் உறைவோமோ?

             அன்னத்தின் மொழிகேட்டு
             அழுகிறதே என்னுள்ளம்!

                                                                     -காரஞ்சன்(சேஷ்)

ஓவியம் பகிர்ந்து எனை எழுதத் தூண்டிய திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

புதன், 13 மார்ச், 2013

படித்ததில் பிடித்தது!- அந்த நாளும் வந்திடாதோ?-காரஞ்சன்(சேஷ்)

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும்
கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!
WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF

தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள்
நாம் தான்!
எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான்.  ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான். நெட் நண்பர்களிடம் இல்லை.
தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .
மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர்.
அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.


· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்
மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!
 


செவ்வாய், 29 ஜனவரி, 2013

குற்றமென்ன?-காரஞ்சன்(சேஷ்)

 
 
குற்றமென்ன? 
 
 
வளர்த்த மரமோ? வளர்ந்த மரமோ?
வளர்த்தவரோ?  வளர்ந்தவரே!
 
மழைவேண்டி மரபலியா?
பிழைசெய்யும் பெரியவரே!
 
மரமிழைத்த குற்றமென்ன?
மரத்தின் மீதேறி
சிரச்சேதம் செய்கின்றீர்?
 
முள்ளெடுக்க முள்ளெடுப்பார்!
இங்கோர் மரத்துண்டே
வெட்டும் கத்திக்கும்
விளங்கிடுதே கைப்பிடியாய்!
 
விலக்கிடுவோம் இச்செயலை!
விளங்கிடுவோம் சிறப்புடனே!
 
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி : கூகிளுக்கு நன்றி!
 
 
 


சனி, 26 ஜனவரி, 2013

வெற்றியின் குறியீடாய்! -காரஞ்சன்(சேஷ்)






விண்ணில் பறவைகள் பாரீர்
வெற்றியின் குறியீடாய்! 

உலகம் சுருங்கிடலாம்- மனித

உள்ளங்கள் சுருங்குவதேன்? 

ஒற்றுமையை வலியுறுத்தி- வானில்

உங்கள் அணிவகுப்போ? 

காற்றைக் கிழித்துப் பறப்பதொன்றும்

கடினமில்லை! ஒன்றிணைந்தால்! 

நற்றலமையின்கீழ் நாமெலா மொன்றுபட்டால்

வெற்றிக்கனிவந்து வீழாதோ நம்கையில்!

                                       -காரஞ்சன்(சேஷ்)

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)

பொங்குக பொங்கல்!

 



பொங்கும் மகிழ்வுடனே
பொங்கிடுக பொங்கல்!
மங்கலத் திருநாளாம்
மகிழ்வளிக்கும் பொங்கல்!
கதிரால் கதிர்விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
நற்பொங்கல் நாம்படைத்து
நன்றிசொல்லும் நாளான்றோ?


மாக்கோல ஒவியமும்
மாவிலைத் தோரணமும்
மங்கலத்தின் குறியீடாய்
எங்கும் நிறைந்திருக்கும்!
செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு அலங்கரிக்க
புதுப்பானை பொங்கலிட
புதுமஞ்சள் மாலையுடன்!

பொங்கிவரும் பாலில்
புத்தரிசி, வெல்லமிட்டு
"பொங்கலோ பொங்கல்" என
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!

உழவு உயர்வடைந்து
உலகில் தழைக்கட்டும்!
விளைபயிர்கள் உரிய
விலைமதிப்பை அடையட்டும்!
பொய்யாது வானொழுகி
புவிவளம் பெருக்கட்டும்!
கைவிரிக்கும் காவிரியும்
கரைபுரள பெருகட்டும்!

பொங்கிவரும் காவிரியால்
பொங்கல் இனி சிறக்கட்டும்!
ல்றுத் விளைநிங்கள்
ற்யிரால் ழைக்கட்டும்!
 
நம்பிக்கை மெய்யாகி
நற்பயன்கள் நல்கட்டும்!
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
பொங்கலோ பொங்கல்!
பொங்குக பொங்கல்!
                           -காரஞ்சன்(சேஷ்)

ஓய்வுண்டோ?-காரஞ்சன்(சேஷ்)



                      ஓய்வுண்டோ?


கயிற்றுக் கட்டில்மேல்
கால்மேல் கால்போட்டு
கனவில் ஆழ்ந்தீரோ?
மனக்கணக்கில் ஆழ்ந்தீரோ?

உழைப்பின் மிகுதியால்
உண்டான களைப்போ?
உழவுத் தொழிலின்மேல்
உள்ளத்தில் அலுப்போ?
 
வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுப் பசிபோக்க
போராடி நெல்விளைத்து- வைக்கோல்
போராக்கி வைத்துவிட்டீர்!
 
உழவே தொழிலென்று
உமைப்போல் பலருண்டு!
சார்ந்து இருப்பதிலும்
சங்கடம் மிகஉண்டு! 
 
இருப்பவர் இத்தொழிலில்
இயந்திரம் புகுத்திவிட்டார்!
இல்லாத உழவரெலாம்
சொல்லொணாத் துயரமுற்றார்! 
 
 வேற்று வேலைசெய்ய
விரும்பிச் செல்பவர்கள்
ஏற்ற கூலிதந்தும்-உழவை
ஏற்க வருவதில்லை! 
 
உழுபவன் கணக்கிட்டால்
உழக்கும் மிஞ்சாது!
உழுபவன் ஓய்ந்துவிட்டால்
உலகே இயங்காது!            

                          -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை!

வெள்ளி, 11 ஜனவரி, 2013

விதியின் கோடு!- காரஞ்சன்(சேஷ்)



                                      விதியின் கோடு!




ஆழ உழுததற்கு
அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள் நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலைஉயர
ஒருகோடு வரையாதோ?   
                           -காரஞ்சன்(சேஷ்) 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை.