வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
புதன், 1 ஜனவரி, 2025
திங்கள், 31 ஆகஸ்ட், 2020
யானை!
யானை!
ஆனை!ஆனை!அழகர் ஆனையென
மழலைப் பருவத்தில் மனதில் பதிந்தாய்நீ!
அப்பாவும் தாத்தாவும் ஆனையென தாம்மாறி
அம்பாரி விளையாட எனைஅமர்த்திடுவார் தம்முதுகில்!
காட்டு விலங்காம் களிறினைக் காணும்
வேட்கை என்னுள் விளைந்தது அன்று!
விழைவை அறிந்ததோ வேழம் ஒன்று?
கழுத்துமணி யொலிக்க கைம்மா(ன்) வந்தது!
தூணெனக் கால்களும், தூக்கியத் துதிக்கையும்
சேம்பின் இலைபோல் செவிகள் அசைய
பெருத்த உருவம் பெற்ற அக்கரிமுகம்
பாகனின் சொல்லுக்கு பணிந்து நடந்தது!
அரிசியொடு வெல்லம் அளித்தனர் பெற்றோர்!
வாரி உண்டு வாழ்த்தியது என்னை!
ஏற்றி அமர்த்தினர் என்னை அதன்மேல்
கதறிநான் பயந்தது காலமெலாம் நினைவில்!
இலக்கியங்கள் பலவற்றில் இடமுண்டு யானைக்கும்
சிலவற்றை மட்டுமிங்கே செப்பிட விழைகின்றேன்!
காற்றில் அலையும் கார்முகில் கூட்டத்தைக்
களிறுகளின் விளையாட்டாய்க் கண்டனன் காளிதாசன்!
முழக்கம் எழுப்பும் முகில்களின் மோதலை
வேழங்களின் போரெனவே விளம்பினான் வால்மீகி!
நிலவின் பிறையென நீண்ட மருப்பால்
புலியையும் வீழ்த்திடும் பலமிகு வேழமும்!
உருவில் பெருத்தோர்க்கு உவமையும் யானையே!
பெரும்பசிக்கு இட்ட பெயரிலும் யானையே!
செருவினில் வெற்றிகளைச் சேர்த்தது யானையே!
முருகனுக்கு மூத்தவனின் முகவடிவும் யானையே!
உணர்ச்சிகளில் மனிதனுக்கு ஒத்ததது யானை!
வாழிடம் செல்லும் வழிமறவாது யானை!
பெருமையும் புனிதமும் நிறைந்த இவ்விலங்கினை
அருகிடாமல் காப்பது அனைவரின் கடமையன்றோ?
-காரஞ்சன்(சேஷ்)
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020
பல்லுயிர் பாமாலை!
பல்லுயிர் பாமாலை!
உயிர்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தநிலை
சுழலும் இப்புவியில் சுழற்சியென நிலைப்பதுவே!
சுற்றுச் சூழலிலே சுயநலத்தால் மனிதனவன்
மாற்றம் விளைவித்தால் மன்னுயிர்கள் என்னாகும்?
நெகிழிப் பயன்பாட்டால் நிலமகளின் நெஞ்சடைத்தோம்!
வான்நீரை அவள்பருக வழியின்றிப் போனதுவே!
அடுக்குமாடி குடியிருப்பால் ஆக்கிரமிப்பில் நீர்நிலைகள்!
நீர்வாழ் உயிரினங்கள் வேறெங்கு போய்வாழும்?
வனங்களை அழிப்பதனால் வாழிடமின்றி காட்டுயிர்கள்
ஊருக்குள் புகுந்து உண்டாக்கும் பெருஞ்சேதம்!
இயற்கைஉரம் தவிர்த்து இடுகின்றார் நஞ்சதனை!
விளைநிலங்கள் கெடுவதுடன் விரைந்தழியும் நல்லுயிர்கள்!
மின்மினியும், பொன்வண்டும், கருடனும் பருந்தினமும்
காணக் கிடைக்காத காரணம் இவையன்றோ?
வாகனப் பெருக்கத்தால் வான்முட்டும் பேரிரைச்சல்!
கரும்புகை கலப்பதினால் காற்றுவெளி மாசாகும்!
ஆலைக் கழிவுகள் நீர்நிலை சேர்வதனால்
ஆழியும் நஞ்சாகி அருகிடுதே கடலுயிர்கள்!
உறைந்திருந்த பனிப்பாறை உருகத் தொடங்குவது
காலநிலை மாற்றத்தால் கவலைதரும் நிலையன்றோ?
உறைநிலையில் ஒளிந்திருந்த கிருமிகளால் நோய்பலவும்
உருவாக சாத்தியங்கள் உண்டெனெவே அஞ்சிடுவோம்!
இயற்கையின் முன்னே எள்ளளவு மனிதரெலாம்!
இயைந்து வாழ்ந்தால் இன்பமுண்டு எந்நாளும்!
பல்லுயிர் ஓம்புதலில் பங்கெடுப்போம் மகிழ்வுடனே!
அடுத்தடுத்த தலைமுறைக்கு அளித்திடுவோம் நற்புவியை!
-காரஞ்சன்(சேஷ்)
வியாழன், 13 செப்டம்பர், 2018
வடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க!
செவ்வாய், 19 ஜூன், 2018
கரையாத துயருமுண்டோ?
செவ்வாய், 12 ஜூன், 2018
அகலட்டும் அல்லல்கள்!
சனி, 14 ஜனவரி, 2017
பொங்கலோ பொங்கல்!
புவிவாழ மேழிதனை
புயமேந்தும் உழவர்கள்
தவிக்கின்றார் துயரினிலே
செவிமடுப்போம் துயர்களைய!
தீயினில் தூசாக
தீமைகள் மறையட்டும்!
போயின துயரென்று
போகியில் துவங்கிடுவோம்!
பகலவன் வரவாலே
பனிவிலகல் போலிங்கு
இனிவரும் நாளெல்லாம்
இன்பங்கள் பெருகட்டும்!
நீருண்ட மேகங்கள்
வேருண்ண நீர்தந்து
விளைச்சலைப் பெருக்கி -மன
உளைச்சலைப் போக்கட்டும்!
செந்நெல் பெருகி
மங்கல மஞ்சளொடு
பொங்கட்டும் மகிழ்வெங்கும்
பொங்கலோ பொங்கலென!
இனிவரும் நாளெல்லாம்
இன்பம் பெருகவென்று
திளைத்திடுவோம் மகிழ்வினிலே
தித்திக்கும் பொங்கலுடன்!
துன்பமும் துயரமும்
தொலையட்டும் இந்நாளில்!
மங்கல ஒலியெழுப்பி
மகிழ்ந்திருப்போம் அனைவருமே!
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வியாழன், 14 ஏப்ரல், 2016
அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே!-காரஞ்சன்(சேஷ்)

அனைவருக்கும் இனிய துன்முகி ஆண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வியாழன், 14 ஜனவரி, 2016
பொங்கல் வாழ்த்து!-காரஞ்சன்(சேஷ்)

பொங்கலோ பொங்கல்!
--காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
திங்கள், 28 டிசம்பர், 2015
வீறு கொண்டு எழு மனமே!- காரஞ்சன்(சேஷ்)
வீறு கொண்டு எழு மனமே!
ஏரோட்டி, எருவிட்டு, நாற்றுநட்டு, நீர்பாய்ச்சி
நாளெல்லாம் உழைத்தாலும் பயிரிடையே வளர்கின்ற
களையெடுத்த பின்தானே காண்கிறோம் நல்விளைச்சல்!
ஊழல் வளர்தலும், சுற்றுச் சூழல் கெடுதலும்
தீயெனப் பரவும் தீவிரவாதமும், பாலியல் வன்முறையும்,
தேசத்தின் வளர்ச்சிக்கு தேக்கநிலை அளிக்காதோ?
நம்முள் பிரிவுகள் நீர்மேல் கோடு!
உறுபசியும், செருபகையும், ஒவ்வாப் பிணிகளையும்
வேருடன் களையெடுக்க விழைந்து முன்வருவோம்!
வள்ளுவப் பெருந்தகை வாக்கினை நாம்போற்றி
சிந்தையொடு செயலும் ஒன்றுபட உழைத்திட்டால்
விந்தைகள் பலவிளையும்! வீறு கொண்டு எழுமனமே!
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
திங்கள், 9 நவம்பர், 2015
இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்!-காரஞ்சன் (சேஷ்)
சனி, 15 ஆகஸ்ட், 2015
வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்! -காரஞ்சன் (சேஷ்)
ஆயின ஆண்டுகள்
அறுபத் தொன்பது!
இந்நாட்டின் விடுதலைக்கு
தன்னலமற்ற தலைவர்கள்
ஈந்தனர் இன்னுயிரை!
முன்னோர்களின் தியாகத்தை
இன்றைய தலைமுறைக்கு
இந்நாளில் எடுத்துரைப்போம்.
இனிவரும்காலம்
இளைஞர்கள் காலம்!
வன்முறை அகற்றிடுவோம்!
வனங்களைக் காத்திடுவோம்!
மாசிலாச் சூழல்
மலர்ந்திட வழிகாண்போம்!
உழவுத் தொழிலின்
உயர்வினைப் போற்றுவோம்!
அனைவருக்கும் கல்வி
அளித்திட வகைசெய்வோம்!
போதைப் பழக்கத்தை
போக்கிட வழிகாண்போம்!
தன்னிறைவுடன் தாய்த்திருநாடு
என்றும் மிளிர்ந்திட
இந்நாளில் கொடியேற்றி
ஏற்றிடுவோம் உறுதிமொழி!
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
சனி, 1 ஆகஸ்ட், 2015
எத்தனை கோடி உள்ளங்களைக் கவர்ந்தாய்! ஏனோ இப்படி சட்டென மறைந்தாய்?- காரஞ்சன்(சேஷ்)
வாழ்வதற்குகந்த பூமி
சனி, 25 ஜூலை, 2015
இசையெனும் அமுதினில் இவரொரு பாகம்! எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்? -காரஞ்சன்(சேஷ்)
ஞாயிறு, 12 ஜூலை, 2015
கவிதைப்போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன் (சேஷ்)
திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும், மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!












